நாடாளுமன்றத் தேர்தல் நாளை தமிழ்நாடு முழுதும் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய நாட்களில் ஓட்டுக்கு பணமழை எவ்வளவு பொழிகிறது என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ்நாடு முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசியலில் வட்டாரங்களில் மின்னம்பலம் சார்பாக விசாரித்தோம்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது.
கடந்த கால தேர்தல்களைப் பார்த்தோமென்றால் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற கட்சிகள் தேர்தலில் ஓட்டுக்கு பெரிய அளவில் பணத்தை இறக்கும். அதனால் இந்த தேர்தலில் பெரிய அளவில் பணமழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக இந்த தேர்தலை கொஞ்சம் கவனமாகவே அணுகுகிறது. ஏற்கனவே மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக கையில் வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளை முடக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதால், பணப் பட்டுவாடாவை கண்காணித்து தேர்தலை நிறுத்திவிட்டால் தவறாகிவிடும் என்ற அடிப்படையில் திமுக தலைமை இந்த முறை தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்ற நிலையிலேயே இருந்துள்ளது.
ஒரு கட்டத்திற்குப் பிறகு மற்ற கட்சிகள் பணம் கொடுக்கும்போது நாம் மட்டும் எப்படி கொடுக்காமல் இருப்பது என்று கட்சிக்குள் விவாதம் எழுந்ததால், பல ஆலோசனைகளுக்குப் பிறகு மற்ற வேட்பாளர்கள் பணம் கொடுக்கும் இடங்களில் நாமும் கொடுக்கலாம் என்றும், வெற்றி பெறுவது எங்கெல்லாம் கடினமாக இருக்குமோ அந்த இடங்களில் கொடுக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக போட்டி கடுமையாக இல்லாத தொகுதிகளில் திமுக சார்பாக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. போட்டி வலுவானதாக இருப்பதாகக் கருதும் சில தொகுதிகளில் ஓட்டுக்கு 250 ரூபாய் திமுகவால் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவில் பிரபல பணக்காரர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடும் தொகுதிகளில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் நிலவியது. ஆனால் அந்த தொகுதிகளில் போட்டி பெரிதாக இல்லை என்று அவர்கள் கருதுவதால் எப்படியும் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று 250 ரூபாய்தான் கொடுத்துள்ளனர்.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் வலுவான போட்டி இல்லாத இடங்களில் பணம் விநியோகிக்கப்படவில்லை. ஒரு சில தொகுதிகளில் 200 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் பணம் கொடுக்கப்படவில்லை.
கடுமையான போட்டி இருப்பதாகக் கருதப்பட்ட பல தொகுதிகளுக்கு திமுக தலைமையிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தை விநியோகிப்பதற்காக பிரிக்கும்போது, மொத்தமாக அனுப்பப்பட்ட பணத்தைக் காட்டிலும் பணம் குறைவதாக ஒரு சிக்கல் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக பணம் தொகுதிக்கு வந்து சேர்வதற்கு முன்பே இடையில் யாரோ பணத்தை சுருட்டிக் கொள்வதாக சலசலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
அதிமுகவைப் பொறுத்தவரை பெரும்பாலான தொகுதிகளில் ஓட்டுக்கு 200 முதல் 250 ரூபாய் பணம் 50% வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பக்கூடிய தொகுதிகளில் 70-80% வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் மட்டும் ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பரவலாக வாக்குக்கு 200 ரூபாய் விநியோகித்திருக்கிறது அதிமுக.
பாஜகவைப் பொருத்தவரை பல இடங்களில் பணம் கொடுக்கவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் அவர் பணம் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாகப் பேசியிருந்தார். ஆனால் கோவை தொகுதியில் சில பகுதிகளில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில பகுதிகளில் ஓட்டுக்கு 2000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கோவைக்கு அருகில் உள்ள பொள்ளாச்சி தொகுதியில் பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் பாஜக சார்பில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லா இடங்களிலும் இல்லாமல் சில இடங்களில் மட்டும் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்கான பொருளாதார வலிமை அவர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. பிரச்சாரங்களுக்கான செலவுகளுக்கே திணறும் நிலையில் தான் அக்கட்சியின் பொருளாதார நிலை இருப்பதால் எந்த விநியோகமும் அவர்களால் செய்யப்படவில்லை.
தேர்தல் நேரம் வந்துவிட்டது, பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்கள், எதுவும் வந்து சேராததால் ஆளுங்கட்சியினரான திமுக நிர்வாகிகளிடம் ஏன் பணம் வரவில்லை, வோட்டு போட வரணுமா வேணாமா என கேட்க ஆரம்பித்துவிட்டனர். நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களிடம் மக்கள் பணம் எங்கே என்று கேட்கிறார்கள், என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை என்று புலம்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பணமழை பொழியாததால், வாக்கு சதவீதத்தில் இது பாதிப்பை ஏற்படுத்துமா, வாக்கு சதவீதம் குறையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஜாமீனுக்காக கெஜ்ரிவால் அதிக மாம்பழங்கள், இனிப்புகளை சாப்பிடுகிறார்” : அமலாக்கத்துறை வாதம்!
”தேர்தல் முறைகேடு… 2 ஆண்டுகள் சிறை தண்டனை போதாது” : உச்சநீதிமன்றம்
”காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது அணை” : டி.கே சிவகுமார் உறுதி!