பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜி வழக்கில் அக்.31 தீர்ப்பு!

அரசியல்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு திங்கட்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட 3 குற்ற வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

இந்த மோசடி விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட ஒரு வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர் ராஜ்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாகவும், இருதரப்பும் சமரசமாகச் செல்ல விரும்புவதாகவும் கூறி சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரிபொறியாளர் தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘அமைச்சராக பதவி வகித்தவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அந்த வேலையை தகுதியானவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்ததாகக் குற்றம்சாட்டினார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது, அதை நாங்கள் ரத்து செய்கிறோம் என்றனர். வழக்கை மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.

செந்தில்பாலாஜி மீதான வழக்கு சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.  

இந்தநிலையில், தன் மீதான மூன்று வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி  தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவற்றை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர்கள்,  ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 31) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி தீர்ப்பை தள்ளிவைத்துள்ளார்.

கலை.ரா

“சத்யாவை கொல்ல 10 நாள் திட்டம்” – கொலையாளி சதீஷ் திகில் வாக்குமூலம்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் – கெஜ்ரிவால் கோரிக்கையின் பின்னணி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *