கர்நாடகாவில் அரிசிக்கு பதிலாக பணம்: குமுறும் சித்தராமையா

Published On:

| By christopher

அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 10 கிலோ இலவச அரிசியில் 5 கிலோ அரிசிக்குப் பதிலாக ரூ.170 பணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு இன்று (ஜூன் 28) அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்து ஒரு மாத காலம் ஆகி விட்டது. எனினும் அக்கட்சி அளித்த 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற சக்தி திட்டத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

அதனைத்தொடர்ந்து அன்ன பாக்யா என்ற வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது.

அரிசிக்கு பதிலாக பணம்

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சித்தராமையா பேசுகையில், “கர்நாடகாவில் தேவையான அளவுக்கு அரிசி கொள்முதல் மற்றும் விநியோகம் உறுதி செய்யப்படும் வரை ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும் அவர், ”அன்ன பாக்யா திட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது. மூன்று மாதங்கள் ஆனாலும் அரிசி கிடைக்கும் வரை, எங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவோம். அதுவரை நேரடி பலன் பரிமாற்ற (டிபிடி) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.34 வழங்கப்படும்.

அதன்படி ஒவ்வொரு பயனாளியும் ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ அரிசியும், மீதி 5 கிலோ அரிசிக்கு 170 ரூபாயும் பெறுவார்கள். இதன்மூலம், நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கணக்கில் ரூ.680 டெபாசிட் செய்யப்படும்.

அரிசி விநியோகம் சரியாகும் பட்சத்தில் பணம் வழங்குவது நிறுத்தப்படும்” என்றார்.

தனியாருக்கு ஓகே… மாநில அரசுகளுக்கு நோ…

தொடர்ந்து அவர், “இந்த மாத தொடக்கத்தில், தேவையான அளவு அரிசியை வழங்க இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) ஒப்புக்கொண்டது. ஆனால் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ஜூன் 13ஆம் தேதி முதல் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மாநிலங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு தானியங்களை தனியார் சப்ளையர்களுக்கு விற்பனை செய்ய அனுமதித்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் அவற்றை எஃப்சிஐ-யில் இருந்து கொள்முதல் செய்வதற்கு தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏழைகளுக்கு எதிரானது. வெறுப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டது. கர்நாடக அரசின் அன்ன பாக்யா திட்டத்தைத் தடுக்க மத்திய அரசு சதி செய்கிறது.” என்று சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

4.42 கோடிக்கும் அதிகமான பயனாளிகள்

மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 4.42 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்னும் ஐந்து கிலோ இலவச அரிசி வழங்க 2.29 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அவசியம்.

இதனால், இத்திட்டத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய, கர்நாடக அரசு மாற்று கொள்முதல் ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறது.

எப்.சி.ஐ விட அதிக விலை

இதுகுறித்து பேசிய சித்தராமையா, “தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு, கேந்திரிய பந்தர் போன்ற நிறுவனங்களிடமிருந்து கூட அரிசி கொள்முதல் செய்ய முடியவில்லை.

இதனால் மாநில அரசு திறந்த சந்தை டெண்டரை கோரியுள்ளது. ஆனால் தானியங்களுக்கு எப்.சி.ஐ விட அதிக விலையை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

எனவே பெரும் முதலாளிகளுக்கு மட்டும் சாதகமாக செயல்படாமல், ஏழை மக்களையும் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு எப்.சி.ஐ அரிசி வழங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரிடம் முறையிட்டுள்ளேன்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை: ’வெட்டி’ எடுக்கப்படும் கனிவளத் துறை…  ராஜினாமா மூடில் அமைச்சர் துரைமுருகன்?

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா டீசர் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share