அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு ஆவணங்களைப் பத்திரமாக வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 23) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது மின்சாரத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த சூழலில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாகச் செந்தில் பாலாஜி உள்ளிட்டார் மீது அமலாக்க துறையும் கடந்த 2021 ஜூலை 29ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து, இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “வழக்குத் தொடர்பான ஆவணங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனு தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மோசடி விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இறுதி விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பிரியா
பாமாயில், பருப்பு விநியோகம்: தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை!
ராணிப்பேட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!