கல்லல் குழும வழக்கு விவகாரத்தில் உதயநிதி ஃபவுண்டேஷன் வங்கிக் கணக்கை அமலாக்கத்துறை இன்று (மே 27) முடக்கியுள்ளது.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பெட்டிக்கோ கமர்ஷியோ என்ற நிறுவனத்துக்கு ராமாபுரத்தில் உள்ள டிஎல்எஃப் வளாகத்தில் கிளை உள்ளது. இந்நிலையில் முதலீட்டுக்காக பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனத்தை சென்னையை சேர்ந்த கல்லல் குழுமம் அணுகியுள்ளது.
கல்லல் குழுமத்தில் கனிம வர்த்தகத்துகாக 114 கோடி ரூபாய் பெட்டிக்கோ நிறுவனம் முதலீடு செய்தது. இதில் 70 சதவிகித பங்கு பெட்டிக்கோ நிறுவனத்துக்கும் 30 சதவிகித பங்கு கல்லல் குழுமத்துக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
போர்ச்சுகல் நிறுவனத்தின் மூன்று இயக்குநர்கள் மற்றும் கல்லல் குழுமத்தின் இரண்டு இயக்குநர்கள் இணைந்து செயல்படலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில் ஒப்பந்தங்களை மீறி கல்லல் குழுமம் தொடர்ந்து செயல்பட்டதாக பெட்டிகோ நிறுவனம் குற்றம்சாட்டியது. இந்த மோதல் முற்றிய நிலையில் 2022 செப்டம்பரில் பெட்டிகோ இயக்குநர் கவுரவ் சாக்ரா சென்னை மத்திய குற்றப் பிரிவில் கல்லல் குழுமம் மீது புகார் அளித்தார்.
தொழில் வளர்ச்சிக்காக கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கியதாக போலி ஆவணங்கள் காட்டி மோசடி செய்ததாகவும், கொடுக்கப்பட்ட பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கல்லல் குழுமம் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து கல்லல் குழுமத்தின் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகளான சரவணன் பழனியப்பன், விஜய் ஆனந்த், அரவிந்த் ராஜ், விஜயகுமார், லட்சுமி முத்துராமன், பிரீத்தா விஜய் ஆனந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து இயக்குனர்கள் சரவணன் பழனியப்பன், விஜய் ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய குற்றப் பிரிவு பதிவு செய்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில் இங்கிலாந்தைச் சேர்ந்த லைகா குழுமத்தின் துணை நிறுவனம் தான் பெட்டிகோ நிறுவனம் என்பது தெரியவந்தது. அதோடு கல்லல் குழுமத்தில் லைகா குழுமம் முதலீடு செய்த தொகை 300 கோடி ரூபாய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக 27.04.2023 மற்றும் 16.05.2023 ஆகிய தேதிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் புகார்தாரர்கள் என இரு நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் முக்கிய டிஜிட்டல் சான்றுகள், ஆவணங்கள், சொத்துக்கள், சந்தேகத்திற்கிடமான ரொக்கம் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் என பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இதனடிப்படையில் நேற்று வரை, தமிழ்நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது. இந்த கல்லல் குழுமத்தில் இருந்து உதயநிதி ஃபவுண்டேஷன் ரூ. 1 கோடி பெற்றதன் அடிப்படையில், அதன் வங்கிக் கணக்கில் இருந்து 34.7 லட்சம் ரூபாயை முடக்கியுள்ளது அமலாக்கத் துறை.
கல்லல் குழுமத்தில் இருந்து நன்கொடை பெற்ற ஒரு கோடி ரூபாய் தொடர்பாக உதயநிதி ஃபவுண்டேஷன் தரப்பில் முறையான விளக்கமளிக்கவில்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மொத்த தொகை சுமார் 300 கோடி ஆகும், இதில் ரூ.36.3 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கு மூலம் அசையும் சொத்துக்கள் ரூ. 34.7 லட்சம் முடக்கப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக கல்லல் நிறுவனம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் கொரோனா பரவல் காலத்தில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஃபவுண்டேஷன் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ஐ.டி. ரெய்டில் சிக்கிய பட்டியல்… செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்!