MOI signed with Google in presence of Stalin: Full details!

ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: முழு விவரம்!

அரசியல்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து அந்நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (ஆகஸ்ட் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினி (TAB) மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், Headphones, Airpod போன்ற அணியக்கூடிய மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துவது மற்றும் பல்வேறு தொடர்புடைய சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் அமைந்துள்ளது. 27 நாடுகளில் 530 உலகளாவிய விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய் (ஃபாக்ஸ்கான்). பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் இன்று சந்தித்து பேசியபோது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்திற்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

மேலும் மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டியதோடு, தமிழ்நாட்டில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் வளர்ச்சி குறித்தும். தொழில்துறை. வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தளவாட வசதிகள் போன்றவற்றில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.

எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம் (Search Engine Technology), கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) அமெரிக்க பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை வுண்டன் வியூ வளாகத்தில் முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் ஆகியவற்றில் Al கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார்.

இதுதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Linkedin முதன்மை செயல் அலுவலர் யான் ரோலன்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre (GCC) மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

கேரவனில் ரகசிய கேமரா… ராதிகா கிளப்பிய பகீர்… இவ்வளவு நாள் மௌனமாக இருந்தது ஏன்? எழும் கேள்வி

ஒரு நல்ல ஆசிரியரின் பண்புகள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *