மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
230 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 163 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று (டிசம்பர் 11) போபாலில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, சிவராஜ் சிங் சவுகான் மேடையில் வைத்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பேசிய மோகன் யாதவ், “நான் கட்சியின் சிறு தொண்டன். உங்கள் அனைவருக்கும், மாநில தலைமை மற்றும் மத்திய தலைமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்புடனும் ஆதரவுடனும், எனது பொறுப்புகளை நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சராக இருந்து பதவியை ராஜினாமா செய்த நரேந்திர சிங் தோமர் சபாநாயகராகவும், ஜெகதீஷ் தேவுடா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவி ஏற்கவுள்ளனர்.
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் யாதவ் உஜ்ஜைனி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னதாக சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL2024: தோனி தொடங்கி கில் வரை… கேப்டன்களின் சம்பளம் இதுதான்!
தேமுதிக பொதுக்குழு : விஜயகாந்த் பங்கேற்பு!