ஒடிசாவின் பாஜக முதல்வராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தள ஆட்சியை கடந்த 2024 சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தது பாஜக.
ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 78 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரிய வெற்றி பெற்றது பாஜக.
இதையடுத்து ஒடிசா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூலை 11) புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேலிட பார்வையாளர்களாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், சுற்று சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் அனுப்பப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஒடிசாவின் புதிய முதல்வராக நான்காவது முறை எம்எல்ஏவாக இருக்கும் மோகன் சரண் மாஜியை பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். துணை முதல்வர்களாக கே.வி.சிங்தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
கியோஞ்சார் தொகுதியில் இருந்து இப்போது நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மோகன் மாஜி. கடந்த சட்டமன்றத்தில் பாஜக கொறடாவாக பணியாற்றியவர் மாஜி. வலிமையான பழங்குடியின தலைவராக அறியப்பட்டவர் மாஜி.
புவனேஸ்வரில் உள்ள ஜந்தா மைதானத்தில் நாளை (ஜூன் 12) புதன்கிழமை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
–வேந்தன்
18-வது மக்களவை செய்ய வேண்டியது!