புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் போலி வீடியோக்களை கண்டறிந்து செய்தி வெளியிட்ட Alt News பத்திரிகையாளர் முகமது ஜுபைர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் வெளியானது. இந்த விவகாரம் இந்திய அளவில் மிகப்பெரிய விவாதமானது. ஹோலி பண்டிகை நெருங்கிய நிலையில், இந்த அச்சம் காரணமாகவும் தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க துவங்கினர்.
போலி வீடியோக்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் தொலைபேசியில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலவரம் குறித்து பேசினார்.
அந்த நேரத்தில் போலி வீடியோக்கள் குறித்து ALt News பத்திரிகையாளர் முகமது ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தார். போலியாக பரவும் வீடியோக்கள் இதற்கு முன்பாக எங்கு நடந்தது, அதில் கைது செய்யப்பட்டவர்கள் விவகாரம் குறித்து தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், இந்தி செய்தித்தாள் டைனிக் பாஸ்கர், வலதுசாரி இணையதளமான ஓப் இந்தியாவின் ஆசிரியர் நுபுர் ஷர்மா மற்றும் CEO ராகுல் ரூஷன், சில யூடியூபர்கள் மற்றும் ட்விட்டர் பயனர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பலரும் Alt News செய்தி நிறுவனம் மற்றும் முகமது ஜுபைருக்கு பாராட்டு தெரிவித்தனர். சிலர் நன்கொடை கூட அளித்திருந்தனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தீங்கிழைக்கும் நோக்கத்துடன் RSS ஆதரவு ஊடக நிறுவனங்களால் போலி செய்திகளை வெளியிட்ட போது, அதனை நீங்கள் அம்பலப்படுத்தியதால் தமிழகத்தில் வகுப்புவாத மோதல்களை தூண்டும் நோக்கம் முறியடிக்கப்பட்டது” என்று முகமது ஜுபைரை பாராட்டியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் போலி வீடியோக்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக முகமது ஜுபைர் தெரிவித்துள்ளார்.
தி வயர் இணைய தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ பொய் செய்திகளை தோலுரித்துக் காட்டியதற்காக இதுவரை பல முறை எனக்கு கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. ஆனால், இந்த முறை அச்சுறுத்தல்கள் அதிகமாகியிருக்கின்றன.நேரடியாகவும் வெளிப்படையாகவுமே மிரட்டுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 2022-ஆம் ஆண்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்தும்படியாக ஜுபைர் ட்வீட் வெளியிட்டதாக டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து ஜுபைர் மீது உத்தரபிரதேச காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 24 நாட்கள் சிறைக்கு பின்னர் ஜுபைர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவருக்கு ஜாமீன் வழங்கியபோது உச்சநீதிமன்றம், அவரது கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதை நீட்டிக்க முடியாது. ஒரு பத்திரிகையாளர் ட்வீட் செய்வதையும் எழுதுவதையும் தடுக்க முடியாது என்று தெரிவித்திருந்தது.
இந்த பின்னணியில் தற்போது வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோக்கள் பொய் என நிரூபித்த ஜுபைருக்கு கொலை மிரட்டல்கள் அதிகமாகியிருக்கின்றன. அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சமூக தளங்களில் கோரிக்கைகள் பெருகி வருகின்றன.
செல்வம்
என்.எல்.சி-க்கு எதிராக போராட்டம்: எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!