எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் மத்திய அரசு முன்னுரிமை அளித்திருப்பதால் பன்னீர் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் ஒற்றைத் தலைமையால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அணிகளாய்ச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் எல்லா நிகழ்வுகளிலும் தனித்தனியாகத்தான் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல் அதிமுக கட்சி சார்பில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரிய அங்கீகாரமாக கருதியது. அதிலும், ’அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்’ என குறிப்பிட்டு மத்திய அரசு எழுதியிருந்தது அவருக்கு மேலும் உற்சாகத்தைத் தந்தது.
அது மட்டுமின்றி, நீதிமன்றத் தீர்ப்பின்படி, எடப்பாடி தரப்பின் கையே ஓங்கியிருக்கிறது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக கருதப்படுகிறது.
அதேநேரத்தில், ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தில், “அ.தி.மு.க. தலைமைக்கு சட்டரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான்தான் நீடிக்கிறேன்.
இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.
மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதுதொடர்பாக இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுக வரவு செலவு கணக்கையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
மேலும், அதை தனது அதிகாரபூர்வ இணைய பக்கத்திலும் பதிவிட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம் தரப்பு, தன் ஆதரவாளர்களைக் கொண்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடத்தியது. அதேபோல், எடப்பாடியும் அவருடைய ஆதரவு பெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கடந்த 27ஆம் தேதி நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக பொதுச்செயலாளர் என்ற முன்னுரிமை அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு இன்று (டிசம்பர் 28) மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் நீண்ட நாட்களாக இந்திய அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் அதிமுகவின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை கொடுத்து அழைப்பு விடுத்துள்ளதால், பன்னீர் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது.
ஜெ.பிரகாஷ்
’பப்பு’ பெயர்: ராகுல் சொன்ன நச் பதில்!
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?