ரேஷன் கடைகளில் மோடியின் படம் ஏன் இடம்பெறவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கேள்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சனம் செய்துள்ளார்.
தெலுங்கானாவில், உள்ள நியாய விலை கடையில் நேற்று (செப்டம்பர் 3) ஆய்வு மேற்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு நியாய விலை கடைகளில் ஏன் பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பி அந்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்துள்ளார்.
இதனால், தெலுங்கானா அரசு போஸ்டர்களில் ரூ. 1105 என்று அதில் மோடியின் புகைப்படத்தைச் சேர்த்து அச்சிட்டு எரிவாயு சிலிண்டர்களில் ஒட்டிவைத்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், ஜிஎஸ்டி ரசீதுகளிலும் மோடியின் படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போல என்று ட்விட் செய்துள்ளார்.
அதில் அவர், ”மக்களின் பணத்தை ஒரு மனிதனின் தொண்டாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது மற்றும் அபத்தமானது. எதுவும் இலவசம் இல்லை. இந்தியர்கள் அனைவரும் வரி செலுத்துகிறார்கள்.”
மேலும், தெலுங்கானா மாநிலத்தின் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராம ராவ் ஒவ்வொரு இந்தியனுக்கும் 1.25 லட்சம் கடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், “நிதியமைச்சர் அவர்கள் நிதி விவேகம் பற்றிப் பேசுகிறார்.
2014 வரை, 67 ஆண்டுகளில் 14 இந்தியப் பிரதமர்கள் சேர்ந்து ₹ 56 லட்சம் கோடி கடனை உயர்த்தியுள்ளனர். ஆனால் பிரதமர் மோடியால் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் கடன் ₹ 100 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. தற்போது ஒவ்வொரு இந்தியருக்கும் ₹1.25 லட்சம் கடன் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
நிர்மலா கேள்வி: சிலிண்டர்களில் மோடி படத்தை ஒட்டி டிஆர்எஸ் பதிலடி!