“மோடியின் பிறந்தநாளை இந்த நாட்டின் இளைஞர்கள், தேசிய வேலையின்மை தினமாக கொண்டாடுவது தமக்கு வேதனை அளிக்கிறது” என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று (செப்டம்பர் 17) தன்னுடைய 72வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அந்த வகையில், உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்துக்களைச் சொல்லிவருகின்றனர்.
இந்த நிலையில், ”மோடியின் பிறந்தநாளை இளைஞர்கள் தேசிய வேலையின்மை தினமாக கொண்டாடுவது தமக்கு கவலையளிக்கிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 17) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதலில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, ”இந்தியப் பிரதமர்களின் பிறந்த தினம் சிறப்பு தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. மறைந்த பிரதமர் நேருஜிக்கு குழந்தைகள்மீதிருந்த அன்பால், அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மறைந்த பிரதமர் இந்திராஜியின் பிறந்த நாள் மதநல்லிணக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் ‘சத்பவ்னா திவாஸ்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.
ஏன், மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள்கூட நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆனால், மோடியின் பிறந்தநாளை இந்த நாட்டின் இளைஞர்கள், தேசிய வேலையின்மை தினமாக கொண்டாடுவது எனக்கு கவலை தருகிறது; வேதனை அளிக்கிறது.
உலகிலேயே இளைய நாடாக இந்தியா இருந்தாலும், நாட்டின் உழைக்கும் வயதினரில் 60% பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
20 – 24 வயதுடையவர்களில், 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவதாக உறுதியளித்தார்.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் 7 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
22 கோடி பேர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர்” எனத் தெரிவித்த அவர், “வேலைவாய்ப்பு குறித்து மத்திய அரசு பதிலளிக்காதது ஏன்” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஜெ.பிரகாஷ்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: முதல்முறையாக வாக்காளர் அட்டை
டி20: தரமான இந்திய அணி–புகழ்ந்த இலங்கை வீரர்