அமலாக்கத் துறை அனுப்பிய 5ஆவது சம்மனையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்த நவம்பர் 2ஆம் தேதி முதன்முதலில் சம்மன் அனுப்பியது.
அதைதொடர்ந்து டிசம்பர் 21, ஜனவரி, 3, ஜனவரி 18 என அடுத்தடுத்து சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த சம்மன் ‘சட்டவிரோதமானது’ என தெரிவித்து அனைத்தையும் நிராகரித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்நிலையில் பிப்ரவரி 2ஆம் தேதி ஆஜராகுமாறு 5ஆவது முறையாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி புதிய சம்மனை அனுப்பியது அமலாக்கத் துறை.
எனினும், இன்றும் ஆஜராகாமல் அரவிந்த் கெஜ்ரிவால் சம்மனை புறக்கணித்துள்ளார்.
“கெஜ்ரிவாலை கைது செய்வதற்குதான் அமலாக்கத் துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது” என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்ப்பதே பிரதமர் மோடியின் நோக்கம். இதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது.
இதனிடையே சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபக்கம் டெல்லியை கொள்ளையடிப்பதாக கூறி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு வெளியே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இரு அலுவலகமும் ஒரே சாலையில் இருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ.க்கள். கவுன்சிலர்கள் என 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.
ஒரு பக்கம் அமலாக்கத் துறை சம்மனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், மறுபக்கம் போராட்டம் காரணமாக ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்சி அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். டெல்லியில் என்ன நடக்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய சேவையை தொடங்கும் பிளிப்கார்ட்…. 20 நகரங்களில் அறிமுகம்!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
பரோட்டா ‘மாஸ்டரான’ இளம் ஹீரோ… ஷாக்கான ரசிகர்கள்!
இந்த ஐடியா நல்லாருக்குல்ல, தேர்தல்ல நின்னு யார் வேணா வந்தாலும் கவலையில்ல, ஈடியை வச்சு முதல்வரை கைது பண்ணி ஆட்சியை கைப்பற்றலாம்…