டிஜிட்டல் திண்ணை: மோடி பிரதமர் ஆக மாட்டார்… ஆர்.எஸ்.எஸ்.சின் அடுத்த பிளான்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  பிரதமர் மோடியின்  வித விதமான  பிரச்சார தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“பிரதமர் மோடி சமீப காலங்களில்  தேர்தல் பிரச்சாரத்தில்  தெரிவித்து வரும் கருத்துக்கள்  விவாதத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகி வருகின்றன.

இந்த வரிசையில்,   ‘நான்  உயிரியல் ரீதியாக  பிறந்தவன் என்று நம்பவில்லை.  என்னை கடவுள்தான் அனுப்பி இருக்கிறார்’  என்று மோடி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அரசியல் ரீதியான கடந்த பத்தாண்டு கால பாஜக அரசின் சாதனைகளை கூறுவதை விட்டுவிட்டு இப்படி தொடர்ந்து  வெவ்வேறு திசைகளில் விவாதத்தை கொண்டு செல்லும் வகையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு கட்டத் தேர்தல் முடிவுக்குப் பிறகும் பிரதமர் மோடியின் இந்த  பிரச்சார ஸ்டைலும்  மாற்றங்களையும் தடுமாற்றங்களையும் நோக்கிச் செல்கின்றன என்று விமர்சகர்கள்  கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முதலில் 400 இடங்களில்  வெற்றி பெறுவோம் என்றவர்கள்  அடுத்தடுத்த  கட்டங்களில்  350,  300,  270 என்று குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.  வட இந்தியாவில் பாஜக நிர்வாகிகள் கூட  இந்த  முறை பெரிய வெற்றி கிடைக்காது என்றே கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில்  பாஜகவின் தாய் இயக்கமான ஆர்எஸ்எஸ் வேறொரு  திட்டத்தில் இருக்கிறது என்ற தகவல் அந்த இயக்கத்தில் இருந்து கிடைத்துள்ளது.

பிரதமர்  மோடி  தனிநபர் வழிபாட்டை ஊக்குவித்து வருகிறார் என்ற வருத்தம் ஆர்.எஸ்.எஸ். சிடம் இருக்கிறது.

காங்கிரஸில் தான் தனி நபர் வழிபாடு அதிகமாக இருந்தது. அதற்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி நாட்டையும்  கட்சியையும் முன்னிறுத்தும் அமைப்பாக  மக்களிடம் அறிமுகமானது.  ஆனால் இப்போது  பாரதிய ஜனதா கட்சி என்பதை விட மோடி என்ற நபருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.  இது  ஒரு கட்டத்தில்  பாரதிய ஜனதா கட்சியை அமைப்பு ரீதியாக சிதைத்து விடலாம் என்று கூட ஆர்எஸ்எஸ்  கவலைப்படுகிறது. மோடியின் இந்த தன்  முனைப்பும் தன் முன்னிறுத்தலும்  ஆர்எஸ்எஸ் சை கோபத்துக்கும்  உள்ளாக்கி இருக்கிறது.

அதே நேரம் 2024 தேர்தல்  முடிவுகளில்  அறுதிப் பெரும்பான்மை  கிடைப்பது கஷ்டம் தான் என்றாலும் பாஜக நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவாகும்  என்று நம்புகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒருவேளை  பெரும்பான்மை இல்லாமல் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக  வரும் பட்சத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி அமையும், ஆனால்   பிரதமராக மோடி இருக்க மாட்டார் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம்.  முழுக்க முழுக்க தன்னை முன்னிறுத்தி சந்தித்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில்…  மோடி  பிரதமராக விரும்பமாட்டார் என்பது ஆர்.எஸ்.எஸின் நம்பிக்கை.  அப்படி ஒருவேளை மோடி விரும்பினாலும் அதை அனுமதிக்காது ஆர்.எஸ்.எஸ்.

ஏற்கனவே வட இந்தியாவில்  பாரதிய ஜனதா கட்சி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிற நிலையில் தென்னிந்தியாவில்  பாஜகவை வலுப்படுத்தும் நோக்கத்தில்  தென்னிந்தியாவிலிருந்து ஒருவரை பிரதமர் ஆக்கலாம் என்று ஆர் எஸ் எஸ் கருதுகிறது.

அந்த வகையில்  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  தற்போதைய  மத்திய அமைச்சரான  பிரகலாத் ஜோஷியை  மோடிக்கு  பதிலாக பிரதமர் ஆக்குவதற்கான திட்டத்தில் இருக்கிறது ஆர் எஸ் எஸ்.

பிரகலாத் ஜோஷி கர்நாடகத்தின் தார்வாட்  தொகுதியில் இருந்து தொடர்ந்து பாஜக எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருபவர்.  ஏற்கனவே கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் இருந்தவர். ஆர்எஸ்எஸின் அடித்தளத்தில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்.

பிராமண வகுப்பைச் சேர்ந்த இவரை  எம்பி தேர்தலில்  வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று  தார்வாட் தொகுதியில் அடர்த்தியாக இருக்கிற லிங்காயத்  சமுதாய மடாதிபதிகள்  வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தனர்.  ஆனால் ஜோஷியே மீண்டும் வேட்பாளராக இப்போது நிறுத்தப்பட்டார்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லிங்காயத் சாமியாரான  திங்களேஷ்  தார்வாட் தொகுதியில்  ஜோஷியை எதிர்த்து இந்த முறை  சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.  ஆனால் ஆர் எஸ் எஸ் அவரிடம் பேசி  அவரை  போட்டியிலிருந்து விலக வைத்து விட்டது.

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட பிரகலாத் ஜோஷிதான்  மோடிக்கு பதிலாக  ஆர் எஸ் எஸ் இன் பிரதமர் வேட்பாளராக இப்போது உள்ளுக்குள்  விவாதிக்கப்பட்டு வருகிறார்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!

பூரி ஜெகன்நாதர் கோயிலில் உள்ள மர்மம் என்ன? யார் அந்த தமிழர் வி.கே.பாண்டியன்?