ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பானது இந்தியர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது என பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. 2019 ஆகஸ்ட் 5 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது.
இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும். அனைத்திற்கும் மேலாக நீதிமன்ற தீர்ப்பு இந்தியர்களின் ஒன்றுமையை வலுப்படுத்தியுள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படும். முன்னேற்றத்தின் பலன்கள் அவர்களை சென்றடைவது மட்டுமல்லாமல், 370-வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதில் உறுதியாக உள்ளோம்.
இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல, இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜம்மு காஷ்மீர் தீர்ப்பு: உமர் அப்துல்லா ரியாக்ஷன்!
ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு!