self explanation on bbc documentary

பிபிசி ஆவணப்படம்: பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – டி.ஆர். பாலு

அரசியல்

பிபிசி ஆவணப்படம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு பேசியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்கும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார். தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ராஜ்நாத்சிங், பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனைத்து கட்சி கூட்டத்திற்குப் பிறகு பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, “பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு பிரச்சனைகள் குறித்துக் குறிப்பாகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த நீட் தேர்வு ரத்து மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஆகவே ஒன்றிய அரசு உடனடியாக குடியரசு தலைவரிடம் ஒப்புதல் அளிக்கக் கோரிக்கை வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சொல்லியிருக்கிறோம்.

இலங்கையில் இருக்கக்கூடிய பாதுகாப்புப் படையினர் தமிழக மீனவர்களுக்கு கொடுக்கின்ற தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சிறையில் அடைப்பது, உடைமைகளைப் பறிப்பது குறிப்பாகப் படகுகளைப் பறித்து உடைத்துப் போட்டு யாருக்கும் உதவாமல் செய்வது போன்ற காரியங்களை வழக்கமாக இலங்கை அரசு செய்து வருகிறது.

இதற்கு உடனடியாக மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றிப் பேசவுள்ளோம். மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் பேசவுள்ளோம்.

மத்திய அரசின் தொழிற்சாலைகளில் தமிழகத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. உடனடியாக பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று பேசவுள்ளோம்.

பிபிசி உலகளவில் ஒரு பெரிய மீடியா. அந்த மீடியாவில் இந்தியப் பிரதமர் குறித்தும், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரதமருக்கு தொடர்பு உண்டு என்றும் ஆவணப்படத்தில் கூறியிருப்பது தான் கடந்த ஒரு வார காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த சரியா தவறா என்று மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திமுக பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளது.

அதானி குழுமத்தின் பங்குகள் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கு பொதுமக்களும் பங்குகளை முதலீடு செய்துள்ளார்கள். இந்த பங்குகள் சரசரவென்று குறைந்துவிட்டது.

இதனால் பங்குதாரர்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இதில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காணவேண்டும் என்று பேசவுள்ளோம்.

2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு செங்கல்லைத் தவிர அங்கு எதுவுமில்லை. ஆனால் 50 மாணவர்களை ராமநாதபுரத்தில் கொண்டு சேர்த்துள்ளார்கள்.

இந்த மோசமான நிலையை மாற்றி, உடனடியாக கட்டத்தைக் கட்டி மாணவர்களை மதுரையில் சேர்க்க வேண்டும் என்று பேசவுள்ளோம்.

தமிழக விவசாயிகளிடம் இருக்கக்கூடிய மாடுகள் ஆடுகளுக்கெல்லாம் நோய் வருகிறது. ஆனால் நோய்க்கான தடுப்பூசி கிடைக்கவில்லை, மத்திய அரசு தடுப்பூசிகளைத் தயார் செய்து அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.

பெண்களுக்கான இடஓதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும் பேசவுள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் வேலைவாய்ப்பில் சரியான இட ஒதுக்கீடு கிடைக்கும்.

இவ்வாறு பல பிரச்சனைகளைக் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவுள்ளோம்.” என்று கூறினார்.

மோனிஷா

பட்டியலின மக்களுக்காகக் கோவில் பூட்டை உடைத்த ஆட்சியர்!

புதிய பயணத்தில் முரளி விஜய்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 thoughts on “பிபிசி ஆவணப்படம்: பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – டி.ஆர். பாலு

  1. பிபிசி பற்றி தன்னிலை விளக்கம் உங்களுக்கு தேவையா, மக்கள் விரோத தீர்ப்பு வரும் போது வாயடைக்க வேண்டியது, இப்போ ஓட்டுக்காக துள்ள வேண்டியது, எவன் நல்லவன்னு பிபிசி தெளிவா சொல்லிருக்கு

  2. அதானி விவகாரத்தை மறைக்கத்தான் இந்த ஆவணப்பட விவகாரம் கிளப்பப் பட்டுள்ளாதோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *