நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 10) பார்வையிட்டார்.modi visits wayanad
கடந்த ஜூலை 30-ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அடித்துச்செல்லப்பட்டன. இது மட்டுமல்லாமல் மேப்படி, அட்டமழா, நூல்புழா போன்ற கிராமங்களும் பாதிக்கப்பட்டன.
இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. மேலும், 150-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணியில் கேரள அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. modi visits wayanad
பாதிக்கப்பட்ட இடங்களைக் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம் கேரள மாநிலம் கன்னூர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டிற்கு வந்த அவர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை, புன்சிரிமட்டோம் கிராமங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடியே பார்வையிட்டார்.
அவருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் மொஹம்மத் கான் மற்றும் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர். அதன்பின் கல்பேட்டாவில் தரை இறங்கிய மோடி, அங்கிருந்து சாலை வழியாகச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட உள்ளார்.
கேரள அரசாங்கம் நிவாரணம் மற்றும் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ 2000 கோடி வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், இந்த நிலச்சரிவைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
அதனால் மோடியின் தற்போதைய வருகை அனைவராலும் கூர்ந்து கவனிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. நிவாரண தொகைக் குறித்தும், தேசிய பேரிடராக அறிவிப்பது குறித்தும் இன்று அவர் முடிவெடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஒலிம்பிக்: 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்த அமன்… வினேஷ் போல ஆகாமல் தப்பித்தார்!