பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) சென்னை வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எங்கே என்ற கேள்வி பாஜக நிர்வாகிகள் மத்தியிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் இன்று காலையில் இருந்தே எழுந்து வருகிறது.
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத்தில் இருந்து சென்னை வருகிறார்.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று முதலே பாஜக நிர்வாகிகள் அவற்றை பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பகல் 1.30 மணி வரைக்கும் சென்னைக்கு வரவில்லை.
பிரதமர் மோடி வரும்போது அவரை அரசு ரீதியாக வரவேற்க மாநில ஆளுநர், முதல்வர், டிஜிபி உள்ளிட்டோர் வருவது வழக்கம். அதேநேரம் அரசியல் ரீதியாக பாஜகவின் மாநிலத் தலைவர் என்ற வகையில் அண்ணாமலை பிரதமரை வரவேற்பதும் முக்கியமானது. ஆனால் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றவர் இன்னமும் சென்னை திரும்பவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் விவகாரங்களுக்காக நேற்று டெல்லியில் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க டெல்லி சென்றார். வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவை பற்றி ஆலோசித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். முறைப்படியான வரவேற்பை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கார் மூலமாக சென்னை விமான நிலைய புதிய முனைய கட்டிடத்துக்கு 2.55 மணிக்கு வருகிறார். அதன் பின் 3 மணிக்கு துவக்க விழா நடக்கிறது.
“மூன்று விழாக்களுமே அரசு விழா என்பதால் மேடையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்க வாய்ப்பு இல்லை. அதேநேரம் மாநில பாஜக தலைவர் என்ற முறையில் விமான நிலையத்தில் பிரதமரை அண்ணாமலை வரவேற்க வரவேண்டும். ஆனால் 12.50க்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானத்திலும் அண்ணாமலை சென்னை வரவில்லை” என்கிறார்கள் ஏர்போர்ட் வட்டாரங்களிலும், பாஜக நிர்வாகிகள் தரப்பிலும்.
அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அண்ணாமலை சந்திக்கவில்லை. அதன் பின் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் டெல்லி புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத்தான் சென்னை விமான நிலையத்தில் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் மோடி வரும்போதும் அண்ணாமலை வரவேற்க வரவில்லையா என்ற தகவல் பாஜகவுக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது.
அண்ணாமலை எங்கே என்ற விசாரிப்புகள் பாஜகவுக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
–வேந்தன்
முதல்வர் – தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி: உதயநிதி
முன் ஜென்மம், இந்த ஜென்ம பாலினத்தை நிர்ணயிக்குமா?