நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்திய பாஜகவுக்கு, மெஜாரிட்டி அளவான 272 ஐ கூட தொட முடியாமல், 240 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
தெலுங்கு தேசம் 16 இடங்கள், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்கள், ஷிண்டே சிவசேனா 7 இடங்கள், லோக் ஜனசகதி 5 இடங்கள் என பாஜகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக.
பாஜகவின் தனிப்பட்ட எண்ணிக்கை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை மட்டுமல்ல…பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் வெற்றி வித்தியாசமும் கடந்த 2019 தேர்தலை விட மிகவும் குறைந்துவிட்டடது.
2019 தேர்தலில் வாரணாசியில் 4 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மோடி, இந்த முறை வெறும் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் ஜெயித்திருக்கிறார்.
இந்த காரணங்களால் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும்போதே மோடி கடுமையான அப்செட்டில்தான் இருந்தார் மோடி.
நேற்று மாலை ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியபோது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி எடுக்குமா என்ற கேள்விக்கு, “நாளை (ஜூன் 5) இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து இதுகுறித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
இந்த நிலையில் ஜூன் 5 ஆம் தேதி மாலை கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணியின் தலைவர்களான ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில்…எக்ஸ் தளத்தில் மட்டுமே பதிவுகளை இட்ட மோடி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இருக்கும் தேசிய பாஜக அலுவலகத்துக்கு வந்தார்.
பாஜக அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் கூடி, ‘ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாகீ ஜே… மோதீ… மோதீ…. ‘ என கோஷங்களை எழுப்பினார்கள். அலுவலகத்தின் வாசலில் இருந்து மோடியை பாஜக தலைவர் ஜேபி நட்டா வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.
மேடைக்கு செல்லும் வழியில் இரு மருங்கிலும் தொண்டர்கள் வண்ணக் காகிதங்களை வீசி மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இரு கைகளையும் தூக்கி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார் மோடி. ஆனால் மோடியின் முகத்தில் பெரிய அளவு எழுச்சி இல்லை. ஒரு மௌனப் புன்னகையோடே பாஜக தொண்டர்களை கடந்து மேடைக்கு சென்றார்.
மேடையில் பாரதத்துக்கு நன்றி என்ற வார்த்தைகள் எல்லா மொழிகளிலும் இடம்பெற்றிருந்தன. தமிழில், ‘நன்றி பாரத்’ என்று இடம்பெற்றிருந்தது.
மேடையில் அமைச்சர்கள் ராஜ் நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர்.
மோடியை வரவேற்க வழக்கமாக அணிவிக்கப்படும் பிரம்மாண்டமான ரோஜா மாலையை தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால் அவ்வளவு பெரிய மாலையெல்லாம் வேண்டாம் என்று மோடி மறுத்து, சிறிய மாலை மட்டும் அடையாளத்துக்காக அணிவித்தால் போதும் என்று சொல்லிவிட்டார். எனவே பெரிய ரோஜா மாலையை தவிர்த்துவிட்டு சிறிய அளவிலான ஒரு மாலையையே மோடிக்கு அணிவித்தனர்.
அதன் பின் உரையாற்றிவிட்டு சிறிது நேரம் பாஜக ஆபீசில் இருந்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார் மோடி.
“இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த தலைவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதும் அடுத்தடுத்த ஆலோசனைகளில் ஈடுபடுவதையும் அறிந்துதான்… பிரதமர் மோடி நேற்று இரவு பாஜக அலுவலகத்துக்கு சென்றார்.
பிரம்மாண்டமான மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்திய நிலையில் இப்போது பாஜகவே 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் கடுமையான அப்செட்டில் இருக்கிறார் மோடி. அதனால்தான் அவர் பாஜக அலுவலகம் வருவதற்கே ஒரு பகல் பொழுது கடந்துவிட்டது” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் மீண்டும் பிரதமராக ஆவதற்கு மோடியே விரும்பமாட்டார். அப்படிப்பட்ட நிலையில் மோடிக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக ஆக்கி கூட்டணி ஆட்சியை நடத்த ஆர்.எஸ்.எஸ், திட்டமிடுகிறது என்று ஒரு பேச்சு தேர்தல் பிரச்சார கால கட்டத்திலேயே பாஜக மூத்த நிர்வாகிகள் மத்தியில் இருந்தது.
இதுகுறித்து மோடி பிரதமர் ஆகமாட்டார்… ஆர்.எஸ்.எஸ்.சின் அடுத்த பிளான் என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பாஜக அலுவலகத்தில் பேசிய மோடி, ஒடிசாவில் பாஜக பெற்ற வெற்றியை குறிக்கும் வகையில், ‘ஜெய் ஜெகநாத்’ என்ற முழக்கத்துடன் ஆரம்பித்தார்.
“1962 க்குப் பிறகு இரண்டு முறை இருந்த ஆட்சியை மூன்றாவது முறையாகவும் மக்கள் தேர்ந்தெடுத்த வரலாற்றுத் தீர்ப்பு இன்று நமக்கு கிடைத்திருக்கிறது. மூன்றாவது முறையாக என்.டி.ஏ. ஆட்சி அமைக்கும். மக்களுக்கு என்றும் நன்றி உடையவர்க்ளாக இருப்போம்” என்று பேசினார் மோடி.
இந்த உரை மூலம் தானே மீண்டும் ஆட்சி அமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் மோடி.
இப்போது வரை ஆர்.எஸ்.எஸ். மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் குறுக்கீடு செய்வதாக தகவல் இல்லை என்கிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள்.
இன்று (ஜூன் 5) பிற்பகல் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு அடுத்தடுத்து பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் மோடி பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.
இந்தியா கூட்டணி. தேசிய ஜனநாயகக் கூட்டணி இரு தரப்பு ஆலோசனைக் கூட்டங்களும் டெல்லியில் தொடர்வதால் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
”இந்தியா கூட்டணியில் சேரமாட்டோம்” : தெலுங்கு தேசம் உறுதி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர்? : கங்குலி ரியாக்சன் என்ன?