பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசவுள்ளார்.Modi to meet Trump
அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று அமெரிக்க குடியேற்ற கொள்கை.
இதன் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுகின்றனர்.
இதில், இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் கையில் விலங்கு போட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வந்தது நாடு முழுவதும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதேசமயம் அவர்களை விலங்கிட்டு அழைத்து வரப்படும் முறையை மாற்ற வேண்டும் என்றும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்காவிடம் பேசி இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 12, 13 அதே தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு டிரம்பை தனியாக சந்தித்து பேசவுள்ளார்
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று (பிப்ரவரி 7) கூறுகையில், “டிரம்ப் பதவியேற்பதை தொடர்ந்து அமெரிக்கா செல்லும் முதல் சில உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். புதிய நிர்வாகம் பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள் பிரதமர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள அழைக்கப்பட்டிருப்பது இந்திய அமெரிக்க கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
இந்த பயணத்தின் போது அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த பிரமுகர்களும் பிரதமர் மோடியை சந்திப்பார்கள்.
அதே நேரம் வணிக தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடும் வாய்ப்பை மோடி பெறுவார்” என்றார்.
அப்போது அமெரிக்காவில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், இந்த பிரச்சனையில் இந்தியா தனது கவலையை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளது. நாடு கடத்தப்படுபவர்களை அழைத்துக் கொண்டு மேலும் பல விமானங்கள் வரக்கூடும். 487 இந்திய குடிமக்கள் இப்போது நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பாக டிரம்பிடம் நேரடியாக பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. Modi to meet Trump