டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்றுள்ளதை அடுத்து அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி 8) காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன.
ஆரம்பத்தில் இருந்து பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், இறுதியில் 48 தொகுதிகளை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் வென்றது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தலைநகரில் ஆட்சியை பிடித்துள்ளது.

ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட டெல்லியில், தற்போது மூன்றாவது முறையாக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த நிலையில் பாஜகவின் இந்த அபார வெற்றி குறித்து பாஜக தலைவர்கள் தங்களது சமூகவலைதள பக்கங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி
பாஜகவின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி. பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும்… உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இந்த மகத்தான வெற்றிக்கு இரவும், பகலும் உழைத்த எனது அனைத்து பாஜக தொண்டர்களையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது டெல்லி மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் இன்னும் உறுதியாக, அர்ப்பணிப்புடன் இருப்போம்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
வாக்குறுதிகளை மீறுபவர்களுக்கு டெல்லி ஒரு பாடம் கற்பித்துள்ளது. இது நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும்.
பாஜகவின் வெற்றி டெல்லியில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். இது ‘மோடியின் உத்தரவாதம்’ மற்றும் மோடியின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையில் டெல்லிவாசிகளின் நம்பிக்கையின் வெற்றி.
இந்த மகத்தான தீர்ப்புக்கு டெல்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மோடியின் தலைமையில், பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும், டெல்லியை உலகின் நம்பர் 1 தலைநகராக மாற்றவும் உறுதியாக உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாஜகவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, டெல்லியின் பிரகாசமான மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
ஊழலை விட நேர்மையையும், பொய்களை விட உண்மையைத் தேர்ந்தெடுத்ததற்காகவும், அவர்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபடுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்ததற்காகவும் டெல்லி மக்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியை சாத்தியமாக்கிய பாஜகவினரின் அயராத முயற்சிகளுக்கும், அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.