கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி மோடி பெயர் குறித்துப் பேசிய அவதூறு வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனங்களைத் தெரிவித்தும் நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) பிரதமர் மோடி, சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையைத் துவங்கி வைப்பது, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டிற்கு பிற்பகல் 2.45 மணிக்கு வருகிறார்.
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி, பிரதமர் வரும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் காவல் துறை அனுமதி வழங்கும் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக “go back modi” என்று அச்சிடப்பட்ட பலூன்களையும் காங்கிரஸார் தயார் செய்து வைத்திருந்தனர். மேலும் காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சன் குமார், “இந்திய ஜனநாயகம் பாதுகாப்பற்ற தன்மையில் இருக்கின்றது.
குறிப்பாக ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடியே வெளியே போ” என்று ஒரு லட்சம் கருப்பு பலூன்களை பறக்கவிடப்போவதாக” வீடியோ வெளியிட்டிருந்தார்.
காங்கிரஸாரின் இந்த அறிவிப்புகளால் போலீசார் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடம் இருந்த கருப்பு பலூன்களை எல்லாம் போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரை வீட்டுக் காவலிலும் வைத்துள்ளனர்.
மேலும் பல காங்கிரஸ் நிர்வாகிகளை நேற்று (ஏப்ரல் 7) இரவு முதல் வெளியே வரவிடாமல் போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் திரவியத்தை இன்று காலை 11.00 மணிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, “திமுக கூட்டணிக் கட்சியாக உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளை வெளியில் விடாமல் வீட்டிலே அடைத்து வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியில் வரும் காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் விரட்டுகிறார்கள்” என்றார்.
இதனிடையே காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ”மோடியே திரும்பி போ” என்று கோஷமிட்டு கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
விடுதலை திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
எடப்பாடிக்கு ’ஓகே’- பன்னீருக்கு ’நோ’: சென்னையில் மோடி