நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பது உறுதியானது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும்அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணியளவில் தொடங்கியுள்ளது.
பாஜக நிர்வாகிகளின் பலத்த கரகோஷத்துக்கிடையே நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவி பிராமணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து 72 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தூய்மை பணியாளர்கள், மன் கி பாத் பங்கேற்பாளர்கள் என சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக அண்டை நாடுகளை சேர்ந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, Seychelles தீவுகளின் துணை அதிபர் அகம்து அபிஃப், பூடான் பிரதமர் ஷெரிங், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாவுத், மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்திய கூட்டணி கட்சி தலைவர்களை பொறுத்தவரை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மட்டுமே பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார்.
மேலும் திரை பிரபலங்களான ஷாரூக்கான், ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோரும், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
வழக்கமாக மாலை நேரம் தொடங்கி இரவு வரை பதவியேற்பு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது பகல் நேரம் அதிக வெப்பம் நிலவுவதால், இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2026ல் சீமானுடன் விஜய் கூட்டணியா? : புஸ்ஸி ஆனந்த் பதில்!
விமர்சனம் : பேட் பாய்ஸ் – ரைடு ஆர் டை!