வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தின் புகைப்படங்கள் வந்து விழுந்தன. modi stalin green room meeting
அவற்றைப் பார்த்துக் கொண்டே தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“ஜனவரி 19 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். அதன் பின் நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க்ரீன் ரூமில் (ஓய்வு அறை) பிரதமரை சந்தித்து சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூடவே சிலரும் இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவதும், ஸ்டாலினுடன் கை குலுக்குவதும் ஏதோ ஒருவித நெருடலை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. வெள்ள நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காத நிலையில் பிரதமர் இந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அதுவும் தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் நேற்று இரவு முதலே, ‘மோடியும் ஸ்டாலினும் அரை மணி நேரம் தனியா பேசினாங்களாமே?’ என்றெல்லாம் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.
அதுமட்டுமல்ல, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்புக் கொடி காட்டவும் கருப்பு பலூன்களை பறக்க விடவும் திட்டமிட்டிருந்தனர். அதை அறிந்து வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம், காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோரை வீட்டுக் காவலில் வைத்தது சென்னை போலீஸ். ஜனவரி 20 ஆம் தேதி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் 19 ஆம் தேதியே சென்னை வந்துவிட்டார். 19 ஆம் தேதி மதியம் சென்னையில் சத்தியமூர்த்தி பவன் வாசலில் நின்ற திண்டுக்கல் மணிகண்டனையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீஸ், திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பத்தில் ஒரு சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தது. இரவு 8 மணிக்கு மேல்தான் அவரை விடுவித்திருக்கிறார்கள். இதையெல்லாம் நேற்றே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்,
இந்த பின்னணியில்தான் இன்று (ஜனவரி 20 ) சத்தியமூர்த்தி பவனில் புதிய மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் முன்னிலையில் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு மேல் முடிந்தது.
இதில் சுமார் பத்து மாவட்டத் தலைவர்கள் பேசினார்கள்.
நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா பேசுகையில், ‘‘நாகப்பட்டினம் எம்பி தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் போட்டியிட வேண்டும். காங்கிரஸ் இம்முறை இரு தனி தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும். பரிந்துரைகளின் அடிப்படையில் சீட் கொடுப்பதைத் தவிர்த்து உழைப்பின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். எந்த வாரிசுக்கும் சீட் கொடுக்கக் கூடாது. மேலும் மொத்த வேட்பாளர்களில் 50% பேர் மாவட்டத் தலைவர்களாக இருக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துப் பேசினார்.
அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டு வருபவரான, தமிழக காங்கிரஸ் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் பேசுகையில், ‘அழகிரி கடந்த ஐந்து வருடங்களாக மாநில முன்னாள் தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாமலே செயல்பட்டு வருகிறார். முன்பு உதயநிதி வந்தபோது முன்னாள் தலைவர்கள் எல்லாம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்கள். இப்போது மேலிடப் பொறுப்பாளர் வந்திருப்பதால் வந்திருக்கிறார்கள். இல்லையென்றால் இவர்களை சத்தியமூர்த்தி பவனில் பார்க்க முடியாது’ என்று போட்டு உடைத்தார்.
இன்னொரு மாவட்டத் தலைவரான தென் சென்ன மேற்கு முத்தழகன் பேசுகையில், ‘திமுகவால் நம் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு சாக்லேட் கூட பிரயோசனம் இல்லை. திமுக கடந்த தேர்தலில் ஜெயித்த சுமார் 60 தொகுதிகள்ல சொற்பமான ஓட்டுலதான் ஜெயிச்சாங்க. அதுக்கு காரணம் காங்கிரஸ்தான். ஆனா காங்கிரஸுக்கு திமுகவால எந்த பயனும் இல்லை. அதனால இம்முறை நாம் கடந்த முறை போட்டியிட்ட இடங்களை விட அதிக இடங்களில் போட்டியிடணும்’ என்று கோரிக்கை வைத்தார்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட வடசென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் பேசுகையில், ‘நாம மோடிக்கு கருப்புக் கொடி காட்டுறோம். ஆனா திமுக அரசு நம்மை எதிர்க்கட்சி மாதிரி ட்ரீட் பண்றாங்க. துரத்தித் துரத்தி போலீஸ் கெடுபிடி பண்ணுது. எங்களை அக்யூஸ்டு மாதிரி நடத்துறாங்க. நாம திமுகவுக்கு கூட்டணிக் கட்சியா, இல்லேன்னா எதிர்க்கட்சியா? இதை மாநிலத் தலைவர் இன்னும் கடுமையா கண்டிக்கணும்’ என்றார்.
திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசுகையில், ‘காங்கிரஸுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. திண்டுக்கல் எம்பி தொகுதியை இம்முறை காங்கிரஸ் கேட்டுப் பெற வேண்டும். பாரம்பரியமாக காங்கிரஸ் தொகுதி இது’ என்று வலியுறுத்தினார்.
பேசிய மாவட்ட தலைவர்கள் பலரும் ஏற்கனவே நாம் போட்டியிட்ட பத்து தொகுதிகளை விட அதிகமாக கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசுகையில் ‘நாம் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆசைப்படுவது நியாயமானதுதான். ஆனால் அதற்கு நம்முடைய கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகளை பலமாக அமைக்க வேண்டும். திமுகவினர் தாங்கள் வலிமையாக பூத் கமிட்டிகள் அமைத்திருப்பதாக சொல்கிறார்கள். நாமும் அதுபோல அமைத்திட வேண்டும்.
2019 இல் ராகுல் காந்தியை பற்றி இந்தியாவில் யாரும் முன்மொழியாத நிலையில் அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர் திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின். இதை நாம் மறந்துவிடக் கூடாது. வருகிற தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களை விட அதிகமான இடங்களைக் கேட்டுப் பெறுவோம்’ என்று பேசினார்.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான அஜோய் குமார் பேசுகையில், ‘தமிழக காங்கிரஸுக்கு மதிக்கத் தக்க அளவிலே டபுள் டிஜிட்டல் சீட் வாங்கித் தருகிறேன். நான் பாண்டிச்சேரியில்தான் படித்தேன். எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் உங்கள் கோரிக்கைகளை எல்லாம் உணர்கிறேன். தேசிய தலைவர் கார்கே விரைவில் தமிழ்நாட்டுக்கு வருகிறார். 2019 தேர்தலை விட அதிக இடங்களில் வரும் தேர்தலில் நாம் போட்டியிட திமுகவிடம் பேசுவோம். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்’ என்றார்.
2019 தேர்தலில் தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 என பத்து இடங்களில் போட்டியிட்ட நிலையில், விரைவில் திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 12 சீட்டுகள் என்பதில் இருந்தே காங்கிரஸ் ஆரம்பிக்க இருக்கிறது. இதுதான் சத்தியமூர்த்தி பவனில் இருந்து இன்று கிடைத்துள்ள தகவல்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரு – உதயநிதி போட்ட ரூட் : திமுக மாநாட்டு ஏற்பாடுகள் – பந்தல் சிவா பேட்டி!
அந்த ரெண்டு பேரும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க: ராகுல் டிராவிட்
modi stalin green room meeting