சட்டபிரிவு 356 குறித்து பேசிய மோடி, எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் தனது பாஜக குறித்தும் பேசியிருக்கலாமே என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான ப.சிதம்பரம் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நேற்று நாடாளுமன்றத்தில் பல்வேறு மாநில அரசுகளை காங்கிரஸ் கலைத்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து ப.சிதம்பரம் பேசுகையில், “ முதலில் நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றவில்லை. அவர் எதிர்கட்சிகளை திட்டிக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசின் ஆட்சிகள் கலைக்கப்பட்டதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை.
அன்றைக்கு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் அதனை பயன்படுத்தினார்கள். அதை தவறாக பயன்படுத்தியிருந்தால், அந்த அரசை மக்கள் அன்றைக்கே தண்டித்திருப்பார்கள்.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் தீர்ப்புக்குப் பிறகுதான், ஒரு அரசை நீக்குவதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டன. அதற்கு பிறகு இருந்த அரசுகள் எந்த அளவுக்கு அரசியல் சாசனத்தை பயன்படுத்தி இருந்தார்கள் என்ற கேள்வி உள்ளது.
தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மாநில அரசுகளை நீக்குவது கிடையாது. அதைவிட மோசமாக எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். ஓர் அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகின்றனர்.
அண்மையில் கோவாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேரை விலைக்கு வாங்கியது அனைவருக்கும் தெரியும் தானே?
அவர்களின் ’ஆப்பரேசன் லோட்டஸ்’ என்பதே எதிர்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது தான். சட்டப்பிரிவு 356 ஐ பேசிய பிரதமர் மோடி அதையும் பேசியிருக்கலாமே?” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல் டெஸ்ட் போட்டி : ரோகித், ஜடேஜா அபார பேட்டிங்… இந்தியா முன்னிலை!