modi should resign from pm post: thirumavalavan

”மோடி பதவி விலக வேண்டும்”: காரணங்களை அடுக்கிய திருமாவளவன்

அரசியல்

”மணிப்பூர் கலவரம், சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல், விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் பொறுப்பேற்று பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதை மத்திய அரசு ஏற்காத நிலையில் கடந்த 2 வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற நோக்குடன் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம்பிர்லா, அதன் மீது ஆகஸ்ட் 8, 9-ந்தேதிகளில் விவாதமும், 10-ந்தேதி பதிலும் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி நாடாளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.  இதனையடுத்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதனத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் மக்களவையில் இன்று  பேசினார்.

அவர், ”மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். சமீபத்தில் மணிப்பூருக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். அங்கு சென்று பார்த்தபோது குக்கி மற்றும் மெய்தி இனத்தைச் சேர்ந்த இருதரப்பும் பாதிப்படைந்துள்ளன என்பது தெரிய வந்தது.

இதுவரை 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இதில் கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவியும் மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளார். ”நாட்டை காப்பாற்ற முடிந்த என்னால், என் மனைவியை காப்பாற்ற முடியவில்லை” என்று அந்த வீரர் வேதனையுடன் பேசியது உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

6 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் முடங்கியுள்ளனர். சொந்த மண்ணிலேயே மணிப்பூர் மக்கள் அகதிகளாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் கலவரம் குறித்து தங்களை பிரதமர் மோடியோ, முதல்வர் பைரேன் சிங்கோ கண்டனம் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட எங்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரும் வேதனை தெரிவித்தனர். மணிப்பூர் மக்களே மாநில மற்றும் மத்திய பாஜக அரசுகளின் மீது நம்பிக்கையை இழந்து நிற்கின்றனர்.

இதற்காக இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் கண்டிக்கத்தக்கது என்ற ஒரு வார்த்தையை கூறிவிட்டு தனது வேலையை பார்த்துகொண்டிருக்கிறார். பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதற்காகவே அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மட்டுமல்ல தற்போது ஹரியானாவிலும் கலவரம் தலைவிரித்தாடுகிறது. விஷ்வ பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் ’கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் அழித்தொழிப்போம்’ என்று வெளிப்படையாக பேசுகிற அவல நிலை உள்ளது.

சமீபத்தில் ரயில் காவலர் ஒருவர் ஓடும் ரயிலில் இஸ்லாமியர்களை தேடித்தேடிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் என அனைவருமே அஞ்சி அஞ்சி வாழக்கூடிய அவலநிலை நீடிக்கிறது.

சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல, இந்து பெரும்பான்மை மக்களும் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

கடந்த 9 ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு. ஆனால் சாமானிய பொதுமக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் முதல் தக்காளி வரை கடுமையான விலையேற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில், இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராகுல்காந்திக்கு மீண்டும் அரசு இல்லம் ஒதுக்கீடு!

ஃபகத் பாசில் பிறந்தநாள்: ட்ரீட் கொடுத்த புஷ்பா படக்குழு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *