“மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரணும்” : திரூவாரூரில் ஸ்டாலின் பிரச்சாரம்!

Published On:

| By Kavi

மோடிக்கு என் மீதும் ஆத்திரம், அதனால் தான் திமுகவை மாநிலம் மாநிலமாக சென்று விமர்சிக்கிறார் என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி, நாகை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உரையாற்றினார்.

காஷ்மீர் நிலை தமிழ்நாட்டுக்கும் வரலாம்

‘நானும் டெல்டாகாரன்’ என உரையை தொடங்கிய ஸ்டாலின், “இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்கிற தேர்தல் இது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சியே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. மாநிலங்களே இருக்காது.

கண்ணுக்கு முன்னால் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தார்கள்.

காஷ்மீரில் 5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. இப்போதும் அங்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலை நாளை தமிழ்நாட்டுக்கு வரலாம்.

இந்தியாவின் எல்லா கட்டமைப்புகளையும் பாஜக சிதைத்துவிட்டது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத வகையில் கைது நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டிருக்கிறது.

தனக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி மோடி இந்தியாவையே நாசம் செய்துவிட்டார். மோடி ஆட்சி தொடர்ந்தது என்றால் தமிழ்நாட்டுக்கு அழிவு. இந்தியாவுக்கு நல்லதல்ல” என்றார்.

முக்கிய வாக்குறுதிகள்…

தொடர்ந்து சில வாக்குறுதிகளை அறிவித்த அவர், “இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் வங்கிகளில் வாங்கி இருக்கக்கூடிய கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும், பெட்ரோல் டீசல், சிலிண்டர் விலை குறைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். அதற்கான ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.

பயிர் காப்பீட்டில் உழவர்கள் செலுத்தக்கூடிய பங்கு தொகையை ஒன்றிய அரசே செலுத்தும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

வேளாண் விளைப் பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு + 50 விழுக்காடு என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்” என தெரிவித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை ஜெராக்ஸ் காப்பி

தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய ஸ்டாலின், ‘அதிமுக வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. ஆளுநரை நியமிக்கும் போது முதல்வரின் ஆலோசனையை கேட்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார். திமுக சொன்னதையே அப்படியே ஜெராக்ஸ் எடுத்து தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அரசுக்கு ஆளுநர் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை கண்டித்து ஒரு நாளாவது எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டாரா?.

அதிமுக ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்கு சென்றபோது அவருக்கு எதிராக போராட்டம் நடத்திய ஒரே கட்சி திமுக.

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுகிறது திமுக.

மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை. அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து அதிமுக ஓட்டு போட்ட காரணத்தால் தான் அந்த சட்டமே இன்று அமலுக்கு வந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம் வருவதற்கு காரணமாக இருந்துவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொண்டு வருவோம் என்று சொல்வதற்கு பெயர் என்ன? பித்தலாட்டம் தான்.

மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். என்ன நாடகம் இது?.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது “எய்ம்ஸ் திறப்பு விழா – மோடி” என்ற தலைப்பு போட்டு, விழாவில் பிரதமர் மோடி பட்டனை தட்டிய போது கைதட்டினீர்களே. அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காமல் ஏன் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஒன்றிய அரசின் கதவை ஒரு முறையாவது தட்டி இருப்பாரா?

இவர் இப்படி என்றால்… 2014க்கு முன்னர் மோடி சொன்ன வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினரா?

கருப்பு பணத்தை மீட்டு வந்து 15 லட்ச ரூபாய், குடும்பங்களுக்கு தருவேன் என்று சொன்னாரே தந்தாரா?, 15 லட்சம் வேண்டாம் 15 ரூபாயாவது தந்தாரா? இதைக் கேட்டால் உள்துறை அமைச்சர் பேட்டியில் , ‘தேர்தலுக்காக சொன்னோம்’ என்று சொல்லி முடித்து விட்டார்.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. படித்த இளைஞர்கள் பக்கோடா விற்கலாம் என்று சொன்னார் மோடி.

மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து இளைஞர்களின் வயிற்றில் அடித்தார்கள். அப்போது,  ’விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்… நானும் விவசாயிதான்’ என்று பச்சை துண்டு போட்டுக்கொண்டு பச்சை பொய் சொன்னவர்தான் பழனிசாமி.

தற்போது டெல்லியில் போராட சென்ற விவசாயிகளை தடுக்க பாகிஸ்தான் பார்டரை விட மோசமான சூழலை ஏற்படுத்தி  முள் படுக்கை அமைத்திருக்கிறார்கள்.

இந்திய நாட்டை ஆக்கிரமிப்பு செய்பவர்களை விட, சொந்த நாட்டு விவசாயிகள் தான் மோடியின் கண்ணுக்கு எதிரிகளாக தெரிகிறார்கள்.

தமிழ்நாட்டு விவசாயிகளையும் நிம்மதியாக விடவில்லை. காவிரி விவகாரத்தில் பாஜக அதிமுகவும் செஞ்ச துரோகங்களை உங்களால் மறந்திருக்க முடியாது.

1969 முதல் காவேரி இறுதி தீர்ப்பு வாங்கும் வரை கலைஞர் பாடுபட்டது அத்தனையும் உங்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார்.

வாயில் வடசுடுவதும் வெறுங்கையால் முழம் போடுவதும் பிரதமருக்கு கை வந்த கலை என்று தெரிவித்த ஸ்டாலின், “பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், ஒன்றிய குழுவினர் ஆகியோர் வந்து சென்றபோதும் வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை. எனவே தமிழ்நாட்டுக்கு எதுவும் தராத பிரதமர் மோடிக்கு மக்களும் வாக்களிமாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும்.

அதனால் தான் மாநில மாநிலமாக திமுகவை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டிலும் அதே பல்லவியை பாடுகிறார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் திமுகவை விமர்சிக்கிறார்.
மோடியின் தூக்கத்தை இந்தியா கூட்டணி கலைத்துவிட்டது. தூக்கத்தில் இருந்து எழுந்து திமுகவை தரக்குறைவாக பேசுகிறார். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. இதுபோன்று எத்தனையோ பார்த்துவிட்டோம்” என குறிப்பிட்டார்.

“பிரதமர் மோடி நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டு வாருங்கள். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மீது இருக்கும் கோபத் தீ அதிகமாகிக்கொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாதவர் வாக்கு மட்டும் கேட்டு வருகிறாரே என தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஆழமாக பதியும்,

பாஜகவுக்கு போடப்படும் ஓட்டு தமிழ்நாட்டுக்கு வைக்கக்கூடிய வேட்டு.
மாநிலத்தை கெடுத்த அதிமுக, மாநிலத்தை கண்டுகொள்ளாத பாஜக என இரண்டு பேரையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்” என தெரிவித்தார் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

Mobile Phone: ரியல்மீ -க்கு போட்டியாக களமிறங்கிய விவோ… சிறப்பம்சங்கள் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel