பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழலை கர்நாடக தேர்தல் மூலம் உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பிரதமர் மோடி கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் இன்று (மே 3) கர்நாடகாவில் சாந்திநகர் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் சித்தராமையா வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா என 4 தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் தான் பாஜக காலூன்றியிருக்கிறது.
இங்கே நாம் பாஜகவுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இதை பயன்படுத்திதான் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஊடுருவ பார்க்கிறார்கள்.
இவர்கள் மத வெறியை தூண்டுகிறார்கள். சமூக நீதி அரசியலை பேசுவதில்லை. வீடு, குடிநீர், சாலை வசதி ஆகியவற்றை பற்றி பேசமாட்டார்கள். மதத்தை பற்றி மட்டுமே பேசுவார்கள். அதனால் காங்கிரஸ் பாஜகவை எதிர்க்கிறது.
ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே போனார். வெயில், மழை, கொட்டும் பனியில் நடந்தார். அவர் எதற்காக நடந்தார் என யோசித்து பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கும். மோடி மதவாத அரசியலை பற்றி பேசுகிறார். அவரது நண்பர் அதானியை உலக பணக்காரராக உயர்த்துகிறார். அரசாங்கத்தின் பொது சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்கிறார். எல்லாமே அதானிக்குதான் போகிறது. அம்பானிக்கும் கொஞ்சமாக போகிறது. கார்பரேட் நிறுவனங்களை வளர்க்க வேண்டும் என்பதுதான் மோடியின் கவலை.
ஆனால் ராகுல் காந்தி மக்களை நேசிக்கிறார். எல்லா மக்களையும் நேசிக்கிறார். எல்லா மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதுதான் காங்கிரஸ். பாஜக மக்களை பிரிக்கிறது. ஆனால் அனைவரையும் ஒன்றிணைக்க ராகுல் முயல்கிறார்.
யாருடைய நோக்கம் நல்ல நோக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தப்பி தவறி பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பு வழங்கிவிடக் கூடாது.
கொஞ்சம் கூடுதலான இடத்தில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள். கடந்த முறை 15 எம்.எல்.ஏ.க்களை வாங்கித்தான் காங்கிரஸை கவிழ்த்தார்கள்.
எனவே பாஜக வெற்றி பெற வாய்ப்பு வழங்கிவிட கூடாது. எல்லா தொகுதிகளிலும் பாஜக டெபாசிட்டை இழக்கச் செய்ய வேண்டும். அவர்கள் தோல்வி அடைந்தால் தான் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தமாட்டார்கள்.
கடந்த முறை காங்கிரஸ் – ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வந்தார்கள். அந்த நிலை ஏற்படக் கூடாது.
கர்நாடாகவில் பாஜக தோல்வி அடைந்தால் அது 2024 தேர்தலிலும் பாஜகவுக்கு தோல்வியை தழுவ வழிவகுக்கும். மோடியை வீட்டுக்கு அனுப்புகிற சூழல் உருவாகும்.
பாஜக வலிமை பெற்றால். ஆர்.எஸ்.எஸ் வலிமை பெறும். நாம் மேலே வர முடியாது” என காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் திருமாவளவன்.
பிரியா
சினிமா, டிவி, யூடியூப்: மாஸ் மீடியாவில் மாஸ் காட்டிய மனோபாலா
புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக கையேந்தும் போராட்டம்!