தமிழகத்திலிருந்து திமுக முற்றிலுமாக அகற்றப்படும் என்று பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தபிறகு, நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஏழை, நடுத்தர குடும்பத்தினர் என அனைத்துப் பிரிவினரும் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
உங்கள் நம்பிக்கையை பாஜக முழுவதுமாக நிறைவேற்றும் என்ற உறுதிமொழியை இங்கு நான் வைக்கிறேன். இது மோடியின் கேரண்டி.
தமிழக மக்கள் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப அறிவியலில் அவர்கள் மிகச்சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இதுதான் தமிழர்களை பாஜகவுடன் நெருக்கமாக்குகிறது. பாஜகவின் சித்தாந்தமும் தமிழக மக்களின் சித்தாந்தமும் மிகவும் ஒன்றுபடுகிறது. தமிழக மக்களுக்கு பாஜகவின் மேல் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா புதிய சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழ்நாடும் இந்த புதிய சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கப்போகிறது.
இந்தியர்களை மிகப்பெரிய வியப்போடும் பெரிய மரியாதையோடும் வெளிநாடுகளில் பார்க்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியர்களை இவ்வளவு பெருமையாகப் பார்க்கிறார்கள் என்பது மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.
நாடு எவ்வளவு முன்னேறுகிறதோ தமிழ்நாடும் அந்தளவிற்கு முன்னேற வேண்டும். அதனால் தான் தமிழகத்திற்காக மதுரையில் எய்ம்ஸ் அமைத்து வருகிறோம். அங்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இலவச சிகிச்சை பெற உள்ளனர்.
தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் எங்களுக்கு ஒத்துழைப்பே கொடுக்காத ஒரு அரசு இங்கே நடைபெற்று வருகிறது. மத்திய அரசு என்ன சொன்னாலும், ஒரு குறை சொல்கிறார்கள். அதை மீறி மக்களுக்கு நாங்கள் நன்மை செய்து கொண்டிருக்கிறோம்.
மத்திய அரசு திட்டங்களை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் இந்த மாநில அரசுக்கு இருக்கிறது என நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் வளர்ச்சியைத் தடுப்பது ஏனென்றால் நாட்டை கொள்ளையடிப்பதற்காக தான். ஆனால், உங்கள் மோடி அதை தடுத்து நிறுத்துவார்.
தமிழகத்திற்கும் ராமருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதற்கு முன்பாக இங்கே இருக்கக்கூடிய தனுஷ்கோடியில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் வழிபாடு நடத்தி ஆசிர்வாதத்தோடு தான், ராமர் கோவில் திறந்தோம். அதனால் மொத்த தேசமும் மகிழ்ச்சியடைந்தது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது, திமுக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தார்கள். அவர்கள் வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள். குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை பார்ப்பதில்லை. ஆனால், பாஜக அப்படி பார்ப்பதில்லை.
அதனால் தான் உங்கள் குடும்பத்திலிருந்து ஒரு தலித் குடிமகனை மத்திய அரசில் அமைச்சராக்கியிருக்கிறோம். இந்தி வேறு தமிழ் வேறு என்று பேசுகிறார்கள். இந்தி பேசுகிற மாநிலத்தில் இருந்து அவருக்கு மீண்டும் எம்.பி பதவியும் கொடுத்திருக்கிறோம். எனென்றால் எங்களுக்கு நாடு தான் முக்கியம்.
அபிநந்தன் பாகிஸ்தான் பார்டரில் விமானத்தில் இருந்து கீழே விழுந்தார். அவருக்கு ஒரு கீறல் இல்லாமல் நாங்கள் அழைத்து வந்தோம். இலங்கையில் ஐந்து மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தார்கள். அவர்களை நான் மீட்டுக்கொண்டு வந்தேன். யாரும் நம் நாட்டு மக்களின் மீது கை வைக்க முடியாது.
திமுக பொய்வேஷம், பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார்கள். ஆனால், இனிமேல் திமுக இங்கு இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை இருக்கிறார், இனிமேல் திமுகவை தேடினாலும் கிடைக்காது. காசு பணம் சம்பாதிக்க உங்களுடைய நம்பிக்கையை, மொழியை, இனத்தை சிறுமைப்படுத்துகின்ற திமுக முற்றிலுமாக இங்கிருந்து அகற்றப்படும்.
குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டினேன். இதுதொடர்பாக திமுக கொடுத்த பத்திரிகை விளம்பரத்தில், சீனாவின் கொடியுடன் ராக்கெட் படத்தை போட்டிருக்கிறார்கள். அந்தளவிற்கு தான் இந்தியா மீது அவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறது. இந்தியாவின் மீது அவர்களுக்கு என்ன பற்று இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
தென்னிந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான் கூர்ந்து உற்று நோக்கி வருகிறேன். உங்களுக்கு தேவையான உதவிகளை தமிழக பாஜக கண்டிப்பாக செய்யும்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்களை அவர்கள் யாரும் முக்கியமாக நினைக்கவில்லை. தேசத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video: ‘வணங்கான்’ ஷூட்டிங்ல என்ன அடிச்சாரு… ஓபனாக பேசிய ‘பிரேமலு’ நடிகை!
“மாநில அரசின் தடைகளைத் தாண்டி வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்”: மோடி
Comments are closed.