கடந்த ஜூலை 9ஆம் தேதி முதல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் மக்கள் திரள் நுழைந்ததிலிருந்து, சொந்த நாட்டிலேயே மூன்று நாட்கள் அதிபர் அகதியாக ஓடியலைந்த அவர், ஜூலை 13 ஆம் தேதி மாலத்தீவு வழியாகச் சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வளைகுடா நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நிதியுதவி என எல்லா உதவிகளும் செய்த இந்தியா அதாவது நமது பிரதமர் மோடி தஞ்சம் கொடுக்கும் விஷயத்தில் மட்டும் மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு கோத்தபய இந்திய மண்ணில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டார். மோடியின் இந்த முடிவுக்குக் காரணம் தமிழ்நாட்டின் அரசியல் சூழல்தான் என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள் முதல் தமிழக பாஜக புள்ளிகள் வரை.
என்ன நடந்தது என்று விரிவாக விசாரித்தோம்…
“ஜூலை 9 ஆம் தேதி தன் வீட்டிலிருந்தே தப்பித்த அதிபர் கோத்தபய, ஜூலை 13 ஆம் தேதி தனது ராஜினாமாவை அறிவிக்கும்படி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். நான்கு நாட்கள் இடைவெளியில் அதிபர் என்ற அந்தஸ்தோடு ஏதாவது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடலாம் என்று கணக்குப் போட்டுத்தான் இந்த நான்கு நாட்கள் என்று முடிவு செய்தார் கோத்தபய.
தனது முதல் சாய்ஸாக அமெரிக்காவைக் கருதினார் கோத்தபய. 2019 வரை அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தவர் அவர். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்தார். இந்த சலுகையும் உரிமையும் மீண்டும் விசா கிடைக்க உதவும் என அமெரிக்கத் தூதரகத்தை அணுகினார். ஆனால் அமெரிக்கத் தூதரகமோ இதை மறுத்துவிட்டது. காரணம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்பியது அமெரிக்கா.
இந்தியத் தூதரகத்திடமும் தொடர்ந்து முயற்சித்து வந்தார் கோத்தபய ராஜபக்சே. டெல்லியிலுள்ள தனது வெளியுறவுத் துறை நண்பர்களிடமும் பேசியிருக்கிறார். இலங்கை ராணுவ விமானத்தில் வருகிறேன் என்று சொன்னதை ஆரம்பத்திலேயே இந்தியத் தரப்பு நிராகரித்துவிட்டது. மீண்டும் கோத்தபய ராஜபக்சே, ’இலங்கை அரசின் போக்குவரத்து விமானத்தில் வருகிறேன். இந்தியாவில் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அதாவது ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் (UL-229 CMB-KWI) கொழும்பு-குவைத் விமானத்தில் கோத்தபய உள்ளிட்டோர் கொழும்பில் ஏறுவது, தொழில் நுட்பக் கோளாறு என்ற காரணம் சொல்லி கொச்சி விமான நிலையத்தில் லேண்ட் செய்யப்பட்டு, அங்கே கோத்தபய உள்ளிட்டோர் இறங்கிக் கொள்வார்கள் என்பதும் அவர்கள் தரப்பு கொடுத்த இன்னொரு திட்டம்.
ஆனால் அப்போது அதிபராக இருந்த கோத்தபயவை தவிர அவரது குழுவினர் யாருக்கும் இந்தியாவின் விசா இல்லை. இந்த திட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது இந்திய வெளியுறவுத் துறை” என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.
கோத்தபய கொழும்புக்கு வெளியே ஓடி ஒளிந்துகொண்டிருந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் ஜூலை 10 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாம் நமது அண்டை நாடு என்ற முறையில் இலங்கைக்கு எப்போதுமே உதவிக் கரமாக இருப்போம். அங்கே நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு இலங்கையிலிருந்து அகதிகள் இந்தியாவுக்கு வரும் அளவுக்கு நமக்கு நெருக்கடி இல்லை” என்று குறிப்பிட்டார். அவர் அகதி என்று குறிப்பிட்டதில் கோத்தபய ராஜபக்சேவும் அடங்குவார் என்பது அடுத்தடுத்த நாட்களில் கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்தது.
13 ஆம் தேதி இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம், “கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை இந்திய ஹை கமிஷன் முற்றாக நிராகரிக்கின்றது. ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப் படுத்தப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்” என்றது அந்த அறிக்கை. இந்த அறிக்கை வந்தபோது ஜூலை 13 ஆம் தேதி கோத்தபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாராக இருந்தார்.
கோத்தபய ராஜபக்சேவை கொழும்பிலிருந்து வெளியேற்றி தஞ்சம் தருவதற்கு இந்தியா துளியும் அக்கறை காட்டாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு பாஜக சீனியர் ஒருவர் நம்மிடம் மனம் திறந்தார்.
“கோத்தபய தப்பிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்தன. அவர் ஓர் அண்டை நாட்டில் இருக்கிறார் என்று அந்நாட்டுச் சபாநாயகர் சொன்னதும் எல்லாருக்கும் ஆட்டோமேட்டிக்காக கோத்தபய இந்தியாதான் நினைவுக்கு வந்தது. நமது மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தமிழகத்திலிருந்தும், அண்மையில் அவரது இலங்கை பயணத்தில் அவரோடு உரையாடியவர்கள் இலங்கையிலிருந்தும் போன் போட்டு விசாரித்துள்ளார்கள்.
அண்ணாமலைக்கு நெருக்கமான சிலர் அவரிடம், ’என்ன சார் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க இருப்பதாகச் செய்திகள் வருகிறதே… ஒருவேளை அது உண்மையாக இருந்தால்…. தமிழ்நாட்டில் பாஜக இனி தலையெடுக்கவே முடியாது.
தமிழகத்தில் இலங்கை பிரச்சினை தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் பெரும் காரணியாக இல்லாவிட்டாலும் அதுவும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக 2009 இல் தமிழர் கொல்லப்பட்டபோது காங்கிரஸுக்கு இருந்த எதிர்ப்பை விட நூறு மடங்கு எதிர்ப்பை இப்போது கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பாஜக தமிழ்நாட்டில் சந்திக்க நேரிடும். 2009ல் தமிழர்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தவர்களில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோத்தபய முக்கியமானவர்’ என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்கள். அவர் இந்தியா வர வாய்ப்பிருக்காது என்று அவர்களிடம் அண்ணாமலையும் சொல்லியிருக்கிறார்.
கடந்த மே மாதம்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதல் முறையாகத் தமிழக பாஜக சார்பாக அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அந்த காலகட்டத்தில் இந்தியாவில் பிரதமராக மோடி இருந்திருந்தால் வேறு மாதிரியாக நடந்திருக்கும் என்றெல்லாம் சொன்னார். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஒருவேளை இந்தியா அடைக்கலம் கொடுத்தால்… தனது கூட்டணிக் கட்சியான அதிமுக, ஆளுங்கட்சியான திமுக, மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளின் முழுமையான எதிர்ப்பை பாஜக எதிர்கொள்ள நேரிடும். மெல்ல மெல்ல தமிழகத்தில் தலை தூக்கி வரும் பாஜகவை இந்த எதிர்ப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும்’ என்ற தகவல் தமிழக பாஜகவிலிருந்தும், உளவுத்துறை தரப்பிலிருந்தும் டெல்லிக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த சங்கிலித் தொடரின் காரணமாகவே கோத்தபயவுக்கு இந்தியா தஞ்சம் என்ற சிந்தனையை முதலிலிருந்தே நிராகரித்துவிட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கை விஷயத்தில் இந்தியா முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் தமிழ்நாட்டின் சென்டிமென்ட்டை, மனசாட்சியைக் கருத்தில் கொண்டதே இல்லை. ஆனால் இப்போது பாஜக அரசில் தமிழ்நாட்டின் மனநிலை பற்றி கருத்தில் கொள்ளப்பட்டே கோத்தபய ராஜபக்சேவுக்கு தஞ்சம் தருவதில்லை என்று உறுதியாக முடிவெடுத்துள்ளார் மோடி.
குடும்ப ஆட்சி இந்தியாவில் எங்கிருந்தாலும் ஒழிப்போம் என்று மோடி பேசி வருகிறார். ஆனால் முதலில் அதை இலங்கையில் தொடங்கியிருக்கிறார் மோடி” என்கிறார் அந்த பாஜக பிரமுகர்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்ற அரசியல் ஆதாயம் ஒருபக்கம் இருந்தாலும்… கோத்தபய ராஜபக்சே விவகாரத்தில் பிரதமர் மோடியின் முடிவு தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு அமைந்தது என்பது நாம் பல தரப்பிலும் பேசியபோது உறுதியாகிறது.
–ஆரா