மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவது உறுதி என அன்புமணி ராமதாஸ் சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
பாஜக – பாமக கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணி ராமதாஸும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாமக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தது.
கடந்த 10 ஆண்டு காலமாக பாமக என்.டி.ஏ கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. நாட்டின் நலன் கருதி, தமிழ்நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
தமிழகத்தில் 57 ஆண்டு காலமாக இரு கட்சிகள் ஆட்சி நடத்தி வருகின்றன. மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் மிகப்பெரிய ஏக்கத்தில் இருக்கிறார்கள். அதை தணிக்கத்தான் பாமக பாஜகவுடன் இணைந்திருக்கிறது.
இந்த நேரத்தில் இரண்டு செய்திகளை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 25 ஆண்டு காலமாக டெல்லிக்கு சென்று வருபவன் நான். டெல்லியில் உள்ள அரசியல் சமூக நிலவரத்தை அறிந்தவன் நான்.
தொடக்க காலத்தில் டெல்லிக்கு சென்றால் அங்கு எங்கு பார்த்தாலும் லாபிஸ்ட் இருப்பார்கள். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய காலத்தில் டெல்லி மக்கள் தொகையில் 90 சதவிகிதம் லாபிஸ்ட், 10 சதவிகிதம் அரசியல்வாதிகள் இருப்பார்கள். லாபிஸ்ட் என்றால் உயர் ரக இடைத்தரகர்கள்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த லாபிஸ்ட் காணாமல் போய்விட்டார்கள். ஊழலை ஒழித்தவர் மோடி.
நான் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். சேலத்தில்தான் படித்தேன். பிரதமர் மோடி வருவதற்கு முன்னதாக விளையாட்டில் இந்தியா பெரியளவில் வெற்றி பெறவில்லை.
ஆனால் மோடி அவர்கள் வந்த பிறகுதான் இன்று உலக அளவில்…..” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பிரதமர் மோடி பொதுக்கூட்டத்துக்கு வந்தடைந்தார்.
திறந்தவெளி காரில் தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு பிரதமர் மோடி மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
மோடி வந்ததும் தனது பேச்சை நிறுத்திய அன்புமணி ராமதாஸ் ஒரு சில நிமிடங்கள் கழித்து பேசத் தொடங்கினார்.
பிரதமர் மோடி வந்துவிட்டார் சுருக்கமாக எனது உரையை முடித்துக்கொள்கிறேன் என்று கூறிய அவர், “மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நமது வீரர் வீராங்கனைகளால் வெற்றி பெற முடியவில்லை. பெரிய அளவில் தங்கப் பதக்கங்கள் பெற முடியவில்லை. காரணம் அரசியல்வாதிகளுக்கு, ஃபெடரேஷனுக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால் அதை பெற முடியவில்லை.
ஆனால் மோடி வந்த பிறகு தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அதனால் பதக்கங்கள், கோப்பைகளை வெல்ல முடிகிறது. இதனால் விளையாட்டு துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்துவிட்டார். இரு தலைவர்கள் மேடையில் இருக்கின்றனர். அவர்கள் ஓ.பி,சி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மோடி, இன்னொருவர் நிறுவனர் ராமதாஸ்.
மிகப்பெரிய வெற்றியை காண இருக்கிறோம். மூன்றாவது முறையாக மோடி வெற்றி பெறுவது உறுதி” என கூறி உரையை முடித்தார் அன்புமணி,
தொடர்ந்து மேடைக்கு வந்த மோடி, ராமதாஸுடன் கைகுலுக்கி வரவேற்றார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்யசபா சீட்டு எங்கே? கையெழுத்து போட மறுத்த ராமதாஸ்..தனி அறைக்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை
Manjummel Boys: செய்த சம்பவம்… புதிய வரலாறு படைத்தது!