செஸ் ஒலிம்பியாட்டில் மோடி படம்: நீதிமன்றத்தில் முறையீடு!

Published On:

| By Kavi

செஸ் ஒலிம்பியாட்டிற்கான விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை இடம்பெற உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இருந்தபோதிலும் பிரதமர் மோடி படம் எங்கும் இடம்பெறவில்லை. இதனால் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட செஸ் விளம்பர பேனர்களில் மோடி படத்தை பாஜகவினர் ஒட்டினர். இதில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இன்னும் சில மணி நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தைச் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share