“தனது நீண்டகால பொதுவாழ்வில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக கலைஞர் பாடுபட்டார்” என்று பிரதமர் மோடி இன்று (ஜூன் 3) புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல தலைநகர் டெல்லியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரெ டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “தமிழ்மொழியை பாதுகாத்த, கலாச்சாரத்தை உயர்த்திப்பிடித்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,
“கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது நீண்டகால பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.
தனது அறிவார்ந்த செயலுக்காக கலைஞர் மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவருடன் பேசிய பல உரையாடல்களை அன்புடன் நான் நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை தேர்தலில் சாதனை : எழுந்து நின்று கைத்தட்டிய தேர்தல் ஆணையர்!