மோடி தாயார் மரணம்: தலைவர்கள் இரங்கல்!

Published On:

| By Selvam

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், எல்.முருகன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று (டிசம்பர் 30) அதிகாலை 3.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பிரதமரின் தாயார் மறைவிற்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன்.

அம்மா தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முதல் நண்பன் மற்றும் ஆசிரியையுமாக இருக்கிறார்.

அவரை இழப்பது உலகின் மிகப்பெரிய வலி. குடும்பத்தை வளர்ப்பதற்கு ஹீராபென் எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகும்.

அவரது தியாக துறவு வாழ்க்கை என்றும் நம் வாழ்வில் இருக்கும். இந்த துயர நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது. கோடிக்கணக்கான மக்களுடைய பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹூராபென் மறைவு குறித்து நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன்.

தாயின் மரணம் ஒருவரது வாழ்வில் நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. இந்த துயரமான நேரத்தில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

modi mother died leaders condolence

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்களது மறைவுச் செய்தியால் மிகவும் துயரமடைகிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த இழப்பை தாங்கும் சக்தியை பிரதமருக்கும் அவரது அன்புரிக்குரியவர்களுக்கும் இயற்கை வழங்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தாயாரை இழந்து வாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஹீராபென் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிகரமான பிணைப்பை அனைவருமே அறிவோம்.

அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்க சொற்கள் இன்றித் தவிக்கிறேன்.

துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தாயுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் அமைதியையும், ஆறுதலையும் பெறுவீர்களாக.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செல்வம்

திமுகவில் ஆ.ராசாவுக்கு கூடுதல் பொறுப்பு!

கிச்சன் கீர்த்தனா : பாகற்காய் சுகியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share