டிஜிட்டல் திண்ணை: மோடி -ஸ்டாலின் கெமிஸ்ட்ரி!  அடுத்து என்ன?

அரசியல்

’நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது’ என்ற பாடல் வரிகள் ஒலிக்க… பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகளை இணைத்து ஒரு மீம் வைஃபை ஆன் செய்தவுடன் இன்ஸ்டாகிராமில் வந்து விழுந்தது.

அந்தப் பாடலை முணுமுணுத்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“தமிழகத்தில் நடக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகள் துவக்க விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அவர் வருவதற்கு முன்பாக அதிமுகவில் பிளவுபட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் மோடியை சந்திப்பார்கள், தங்கள் கட்சி பிரச்சினைகளை விவாதிப்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் பிரதமர் மோடியின் சென்னை விஜயத்திற்கு பிறகு அதற்கு நேர் மாறாக திமுகவில் சலசலப்புகள் எழுந்துள்ளன.

கடந்த மே மாதம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நலத்திட்ட துவக்க விழாவுக்காக சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி. அப்போதும் நேரு ஸ்டேடியத்தில் தான் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிரதமர் மோடிக்கு முன்னதாக பேசிய முதல்வர் ஸ்டாலின்… தமிழகம் கொடுக்கும் வரிக்கு ஏற்ற அளவில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்றும், திராவிட மாடல் என்றால் என்ன என்றும் பேசியது அதிர்வலைகளை எழுப்பியது. பிரதமர் மோடி முன்பே தயாரிக்கப்பட்ட உரையை கொண்டு வந்திருந்ததால் ஸ்டாலினுக்கு தன் பேச்சில் பதில் அளிக்கும் வாய்ப்பும் அந்த விழாவில் இல்லை. 

ஸ்டாலினுடைய இந்த பேச்சை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்தார். 

இது மட்டுமல்ல அந்த விழாவில் ஸ்டாலின் பெயரை சொல்லும் போது கூட்டத்தில் இருந்த திமுகவினர் ஆர்ப்பரிக்கவும் மோடி பேரை சொல்லும் போது கூட்டத்தில் இருந்த பாஜகவினர் குரல் எழுப்பவும் என ஒரு புதிய ரசிக்கத்தகாத கலாச்சாரம் நிலவியது.

இது மட்டுமல்ல அந்த மேடையில் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் இருந்து சற்று தள்ளியே நின்று கொண்டிருந்தார். பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கான சாவிகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் போது ஸ்டாலினை தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டார் மோடி. விழா முடிந்த சில நிமிடங்களிலேயே ஸ்டாலினுடைய பேச்சின் சாராம்சத்தை கேட்டு மோடியும் டென்ஷன் ஆனார்.

இப்படியாக ஸ்டாலின்- மோடி, திமுக- பாஜக ஆகிய இரு தரப்பிலும் மேடையிலும் மேடைக்கு வெளியேயும் ஓர் இறுக்கம் கடந்த விழாவில் நிலவியது.

ஆனால் இப்போது இந்த விழாவில் மேடையில் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையே நிலவிய அன்யோன்யம், சிறிதும் இறுக்கமில்லாத சினேகம் உள்ளிட்டவை அரசியல் அரங்கில் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு டெல்லி சென்று பிரதமரை வரவேற்கத் திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின். ஆனால் அப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை மண்ணில் வந்து இறங்கியதில் இருந்து திமுக அரசின் புதிய வரவேற்பு அனுபவத்தை பெற்றார் மோடி. பாஜகவினர் செய்திருந்த வரவேற்பு ஏற்பாடுகளுக்கும் சேர்த்திருந்த கூட்டத்தினருக்கும் போலீசார் எந்த தடையும் ஏற்படுத்தவில்லை. 

செஸ் ஒலிம்பியாட் மேடையில் இருந்து அரங்கை பார்த்து ரசித்த மோடி தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்டாலினிடம் விழா ஏற்பாடுகள் பற்றி அவரது முதுகில் தட்டிக் கொடுத்து வெகுவாக பாராட்டினார். மோடியின் கையைப் பிடித்து அதை அவரது பாராட்டை பணிவோடு ஏற்றுக்கொண்டு கைகளை கூப்பி நன்றியும் தெரிவித்தார் ஸ்டாலின். இருவரும் சிரித்துப் பேசிய காட்சிகள் அரசியல் அரங்கின் அடுத்தகட்ட காய் நகர்த்தல்களுக்கு தீனி போடுவதாகவே அமைந்திருக்கிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக டெல்லியில்  நிலவிவரும் உஷ்ணத்தின் தொடர்ச்சியாக… சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க அடையாளப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னை போலீஸ் காங்கிரஸின் போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டது. 

‘அதிமுக ஆட்சியில் எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது மோடி சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கிறார். அப்போது பலமான எதிர்கட்சியான திமுக மோடிக்கு எதிராக தனது கூட்டணியை வைத்து கருப்புக் கொடி போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. அப்போது கூட பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த ஆளுங்கட்சியான அதிமுக, போராட்டம் நடத்திய திமுகவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவில்லை. வீட்டுக்காவலில் வைக்கவில்லை. 

ஆனால் இப்போது திமுகவோ தனது எதிர்க்கட்சியாக இருக்கிற பாஜகவை எதிர்த்து தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் போராட்டம் நடத்துவதை கூட பொறுத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் நடத்த இருந்த அடையாளப் போராட்டங்களை கூட அடையாளம் இல்லாமல் செய்து விட்டது திமுக அரசு. இந்த அரசியல் ஈக்குவேஷன் வேறு ஏதோ செய்திகளை சொல்ல வருகிறது’ என்கிறார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் புள்ளிகள்.

எப்போதும் திமுகவுக்கு தோழமையாகவே இருக்கும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை கூட இந்த முறை ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக அறிவித்தார். முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் போலீஸ் பாஜகவினரையும்  மோடியையும் குளிர்ச்சிப்படுத்துவதாக நடந்து கொள்வது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் முதல்வர் வசம் இருக்கும் போலீசை எதிர்த்து குரல் கொடுக்க… திமுகவின் எதிர்க்கட்சியாக அறியப்பட்ட பாஜக செஸ் விழாவுக்காக தமிழக முதல்வரை மனமார பாராட்டியிருக்கிறது.

இப்படியாக நேரு ஸ்டேடியத்தின் கடந்த மே மாத மேடைக்கும் இப்போதைய ஜூலை மாத மேடைக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்த்தி இருக்கிறது மோடி ஸ்டாலின் இடையிலான கெமிஸ்ட்ரி. 

இது இரு தனிப்பட்ட தலைவர்களுக்கான கெமிஸ்ட்ரியா அல்லது அரசியல் ரீதியான வேதியியல் மாற்றங்களையும் இது ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘பிரதமருக்கு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சி முறை பற்றியும் பல்வேறு தளங்களில் இருந்து ரிப்போர்ட் சென்று கொண்டிருக்கிறது. இந்த வகையில் தென்னிந்தியாவில் சிறப்பான ஆட்சி நடக்கும் மாநிலங்களாக தமிழ்நாடும் கேரளாவும் இருப்பதாக பிரதமருக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. சில புகார்கள்- குறைபாடுகள் இருந்தாலும் பொதுவான அளவில் தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாகவே மோடிக்கு தகவல் சென்றுள்ளது. 

மேலும், குறுகிய கால அளவில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பதை பார்த்து மோடியே ஆச்சரியப்பட்டு விட்டார். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது பல சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார். அவற்றோடு ஒப்பிட்டு இந்த நிகழ்ச்சியை ஸ்டாலினிடம் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார் மோடி. இப்போது இவ்வளவு தான் நடந்திருக்கிறதே தவிர அரசியல் ரீதியாக எதையும் சொல்வதற்கில்லை. ஆனால் மோடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான தூரம் குறைந்துவிட்டது உண்மைதான்’ என்கிறார்கள் டெல்லி தட்பவெப்பம் அறிந்த பாஜக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *