மோடி-எடப்பாடி-ஓபிஎஸ்: அந்த இருபது நிமிடங்களில் நடந்தது இதுதான்!

அரசியல்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்து நேற்று (நவம்பர் 11) மாலை  மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார்.

நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு மதுரைக்கு விமானம் மூலம் வந்த பிரதமரை வரவேற்க அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும்  சில மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையம் வந்துவிட்டனர்.

தனித்தனியாகவே இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து கார் மூலமாகவே மதுரை திரும்பினார் பிரதமர் மோடி.

அவரை வழியனுப்பி வைப்பதற்காக  எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் நேற்று  மாலை மதுரை விமான நிலையத்துக்கு சென்றனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்கான விமானத்துக்கு அருகே பிரதமரை வழியனுப்ப ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட விவிஐபிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் விமானத்துக்கு அருகே வருவதற்கு இருபது நிமிடங்கள் முன்பே விவிஐபிகள் வழியனுப்பும் நிகழ்வு நடக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டனர்.  அவர்களில் எடப்பாடி  பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அருகருகே நின்று கொண்டிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியோடு நத்தம் விசுவநாதன், ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் நின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தோடு மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் இருந்தனர்.

அந்த இருபது நிமிடங்களிலும் எடப்பாடியும், பன்னீரும் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு சில அடிகள் இடைவெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.

இருவரும் முகம் பார்த்துக் கொள்ளும் நொடிகள் திடீரென வாய்த்தால் கூட சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டனர். வழங்கப்பட்ட வரிசைப்படி  எடப்பாடியும், பன்னீரும் அடுத்தடுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

modi madurai visit eps ops meet

பன்னீர் பக்கம் திரும்பாமல் இந்தப் பக்கம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சர்களிடம்  நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். பன்னீரும் தனது ஆதரவாளர்களுடனேயே பேசிக் கொண்டிருந்தார்.

இப்படியாக பிரதமர் வரும் வரை அந்த இருபது நிமிடங்கள் இருவருக்கும் இறுக்கமானதாகவே இருந்தது. பிரதமர் மோடி இருவரையும் கடந்து செல்லும்போது இருவரும் மலர்களைக் கொடுத்தனர்.

அதை சேர்த்துப் பெற்றுக் கொண்ட மோடி, அவர்களைக் கடந்து சென்றதும்தான் இருவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு கிளம்பினர்.

இதற்கிடையே பன்னீர் செல்வத்தையும், எடப்பாடியையும் மோடி அடுத்தடுத்து நிற்க வைத்து, சேர்த்து ரோஜா பூவை வாங்கிக் கொண்டார். அதனால் இருவரையும் இணையுமாறு மோடி மெசேஜ் கொடுத்துவிட்டார் என்று தகவல்கள் பரவின.

modi madurai visit eps ops meet

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் உதயகுமாரைத் தொடர்புகொண்டு, ‘அவரும் நானும் பக்கத்துப் பக்கத்தில் நின்று மோடியை வழியனுப்பி வைத்த படத்தை வைத்துக் கொண்டு ரெண்டு பேரையும் சேரச் சொல்லிவிட்டார் மோடி என்று செய்திகள் வருகின்றன. நீங்க உடனே பிரஸ்மீட் பண்ணி என்ன நடந்ததுனு சொல்லுங்க’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மதுரையில் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார்,  “நேற்று மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க நின்றபோது ஆளுநரிடம் சால்வையை பெற்ற பிறகு, அண்ணன் எடப்பாடியிடம்தான், ‘ஹவ் ஆர் யு’ என்று பிரதமர் கேட்டார். ‘ஐயாம் ஃபைன்’ என்று எடப்பாடி பதிலளித்தார்,

இதேபோல செண்ட் ஆஃப் பண்ணும்போதும்  அதிமுக சார்பில் எடப்பாடியார் தலைமையில் சென்றிருந்தோம். முதல்வரும் வந்திருந்தார். ஆனால் ஊடகங்களில் ஏதேதோ செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் ஊடகங்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்த தகவலைச் சொல்கிறேன்.

பொதுக்குழுவில் எடுத்த முடிவு முடிவுதான். அதை நாமக்கல் பொதுக்கூட்டத்திலும் தெளிவாக சொல்லிவிட்டார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

எடப்பாடியும், பன்னீரும் மோடியை வழியனுப்ப நின்ற இருபது நிமிடங்களில் நடந்தது இதுதான். நேற்று பிற்பகல் மதுரை விமான நிலையத்தில் மோடியை வரவேற்றபோதும் பன்னீரும், எடப்பாடியும் அருகருகேதான் நின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆரா

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா ரமேஷ் பிரபா? அவரே சொன்ன பதில்!

கமலாலயத்தில் அமித்ஷா நடத்திய ஆலோசனை!

+1
1
+1
2
+1
1
+1
0
+1
3
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *