மோடிக்கு சதுரங்க ஆட்டமென்றால் ரொம்ப பிடிக்கும் : முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழர்கள் வரலாறு , பன்பாட்டு கலாச்சாரம் ,அறிவுத்திறன் குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. உலகமே வியக்கும் வண்ணம் மிக பிரமாண்டமாக தொடங்கிய இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி ,ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரை வரவேற்று தன்னுடைய உரையை தொடங்கினார்.

அவர் பேசுகையில், ”இந்தியாவுக்கு பெருமை தரும் நாள் என்பதால் பிரதமர் நரேந்திர மோடியை தொடங்கி வைக்க அழைக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம். இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக அழைப்பிதழுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டதால் என்னால் நேரில் செல்ல முடியவில்லை. அப்போது பிரதமர் மோடி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ‘நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் கட்டாயம் கலந்து கொள்வேன்’ என தெரிவித்தார்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து, ’உங்களின் பங்கேற்பு மேலும் சிறப்பு செய்துள்ளது’ என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிகவும் பிடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும்” என்றார்.

மேலும் அவர், ”ரஷ்யாவில் நடக்கவிருந்த இந்தப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர்கள் சிறப்பானவர்கள். தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு சதுரங்கம். அன்று அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது, இன்று மக்களின் விளையாட்டாக மாறியுள்ளது. இது அதிர்ஷ்டத்தின் விளையாட்டு அல்ல, அறிவுத்திறனை வெளிப்படுத்தும் விளையாட்டு, மாணவர்கள் அனைவருக்கும் இந்த செஸ் விளையாட்டு போட்டியை கொண்டு சேர்க்க வேண்டும்

தமிழ்நாட்டின் மதிப்பு இன்று முதல் மேலும் உயருகிறது. இது மிக சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை. இந்தியாவில் முதல்முறையாக இந்தப் போட்டி நடக்கிறது. இரு அரசர்கள், இரு கோட்டைகள், இரு குதிரைகள், இரு அமைச்சர்கள் என கருப்பு வெள்ளை களமாகவே செஸ் உள்ளது. கீழடியில் இரு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. அவை சதுரங்கம் விளையாட பயன்படுத்தப்பட்டதா என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

போர் மரபிற்கும் தமிழர்களுக்கும் தொடர்பிருப்பதை சதுரங்கம் காட்டுகிறது . ஆணைக்குப்பு என்று தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்தது.”ஆணைக்குப்பு ஆடுவோரை போலவே” என்று நாலாயிர திவ்யபிரபந்தம் சொல்கிறது. அந்த அளவிற்கு பல்லாயிரம் ஆண்டுகளாக சதுரங்கத்திற்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அறிவுடன் தொடர்புடைய விளையாட்டு சதுரங்கம். மூளை சார்ந்த இந்த விளையாட்டு அறிவை நம்பிய விளையாட்டு. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்வியுடன் சேர்த்து இந்த விளையாட்டையும் கற்பிக்க வேண்டும். குறிப்பாக அறிவுத்திறனை வளர்க்கும் சதுரங்கத்தின் பங்கும் இருக்க வேண்டும். தமிழகத்தில், இந்தியாவில் மேலும் பரவச் செய்ய இந்தப் போட்டி உதவியாக இருக்கும். அதற்கு இந்த ஒலிம்பியாட் சிறப்பான துவக்கமாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *