டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை விட்டுப் பிடிக்கும் மோடி… பன்னீருக்கு தொடரும் பாஜக பயம்…  பின்னணி என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்பாக்ஸில் ஓ. பன்னீர்செல்வம் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்ட புகைப்படங்கள் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலும் ஓரம் கட்டப்பட்டு விட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி 20ஆம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக மேடையில் அமர இருந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து உள்ளரங்கத்தில் ஒரு சின்ன மீட்டிங் நடத்தினார் பன்னீர்செல்வம்.  அந்த மீட்டிங்கில், ‘நீங்கள் மேடையில் மைக் பிடித்து பேசும்போது பாஜகவையோ அண்ணாமலையையோ திமுகவையோ தாக்கி பேச வேண்டாம்’ என்று முன் நிபந்தனை விதித்தார்.

இதைக் கேட்டு தலைமை நிர்வாகிகள் சலிப்படைந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  எடப்பாடியுடன் கூட்டு சேர்ந்து பன்னீர்செல்வத்தை முற்றிலுமாக ஓரம் கட்டி விட்டார். தேர்தல் களத்தில் மட்டுமல்ல பாஜக மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் ஆளுநராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கூட பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அழைப்பில்லை. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் பாஜகவை பார்த்து பன்னீர்செல்வம் ஏன் பயப்படுகிறார் என்று அந்த அரங்கத்திலேயே முணுமுணுத்துக் கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் வரும் மார்ச் மாதம் ஜெயலலிதா பிறந்தநாள் விழா அதிமுகவின் பொன்விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவை கொண்டாடுவோம் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை ரவுண்டு கட்டிய நிர்வாகிகள், ‘கொண்டாடுற நிலையிலயா நாம் இருக்கோம்?’ என்று கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.  அவர்களிடம் பதில் அளித்த வைத்தியலிங்கம், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட வேண்டும் என்று பன்னீர்செல்வம் விரும்பினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தன் தலைமையில் தான் அதிமுக என்று பல்வேறு வகைகளில் காய் நகர்த்தி இரட்டை இலை சின்னத்தை வாங்கி விட்டார். இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பாவம் வரக்கூடாது என்று தான் பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் சமரசமாக போனார். இப்போது பாஜகவின் டெல்லி தலைவர்களிடமிருந்து பன்னீர் செல்வத்துக்கு தகவல் வந்துள்ளது.

அதாவது நாங்கள் எடப்பாடியை சற்று விட்டு பிடிக்கிறோம். இடைத்தேர்தலில் அவர் விரும்பிய படியே இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்ட பிறகும் அதிமுக தோல்வியடையும். அந்த அடிப்படையில் ஒருங்கிணைந்த அதிமுகவை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் உருவாக்குவதற்கு எடப்பாடியின் தோல்வியை காரணமாக வைத்தே டெல்லியில் இருந்து காய்கள் நகர்த்தப்படும். எனவே பொறுத்ததுதான் பொறுத்தீர்கள் இன்னும் சற்று பொறுங்கள் என்று டெல்லி பாஜக தலைவர்கள் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார்கள். அதன் அடிப்படையில் தான் பன்னீர்செல்வம் இப்போது பாஜக எதிர்ப்பு வேண்டாம் என்கிறார்.

மார்ச் மாதம் திருச்சியில் பெரிய மாநாட்டை கூட்டி நம் பலத்தை நிரூபிப்போம். இப்போதைக்கு சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று  மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் வைத்திலிங்கம். ஆனால் எங்கே செல்லும் இந்த பாதை என்ற புலம்பலோடு தான் மாவட்ட செயலாளர்கள் கூட்ட அரங்கை விட்டு புறப்பட்டார்கள். இதுபற்றி எடப்பாடி தரப்பில் விசாரித்தால், ‘இதற்காகத்தான் ஈரோடு கிழக்கில் இரட்டை இலையைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார் பன்னீர்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்”  என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

தொடரும் தாக்குதல்: என்ன நடக்கிறது ஜே.என்.யு.வில்?

இடைத்தேர்தலை ரத்து செய்க: தேர்தல் ஆணையரிடம் தேமுதிக மனு!

+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *