வரும் டிசம்பர் 1, 4 தேதிகளில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பின்னர் முதன் முறையாக பிரதமர் மோடி இன்று (நவம்பர் 6) குஜராத் சென்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
குஜராத் முதல்வராக இருந்து 2013 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று பிரதமரானார் மோடி. மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றார்.
அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
இந்த பின்னணியில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு முதன் முறையாக இன்று குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள கப்ராடா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி.
தனது தாய்மொழியான குஜராத்தியில் பேசிய மோடி, “குஜராத் மக்கள் ஒவ்வொருவரும் முழுமையான தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்.
அவர்கள் ஒவ்வொருவரின் இதயத்தின் குரலும், ’இந்த குஜராத்தை நான் உருவாக்கினேன்’ என்று சொல்லும்” என்று உரக்கக் கூறி…
மக்களையும், ‘இது நான் உருவாக்கிய குஜராத்’ என்று சொல்லச் சொன்னார். மக்களும் அதைத் திரும்பித் திரும்பி கோஷமிட்டார்கள்.
“கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை அவதூறு செய்யும் வகையில் செயல்பட்டு வரும் பிளவுபடுத்தும் சக்திகளை குஜராத் மாநிலம் துடைத்தழிக்கும்.
வெறுப்பை பரப்புவதில் ஈடுபட்ட பிரிவினைவாத சக்திகளும் குஜராத்தை அவமதிக்க முயன்றவர்களும் குஜராத்தில் இருந்து ஏற்கனவே துடைத்தெறியப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலிலும் அவர்களுக்கு அதே கதிதான் ஏற்படும்” என்றார் மோடி.
மேலும், “ நான் டெல்லியில் அமர்ந்திருந்தாலே குஜராத்தில் இம்முறை பாரதிய ஜனதா மிகப்பெரும் சாதனை வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று எனக்கு தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் நான் இங்கே ஏன் வந்துள்ளேன் தெரியுமா? எனது கடந்த கால சாதனைகளை முறியடிக்கவே இங்கு வந்துள்ளேன்” என்று பேசினார் மோடி.
பின்னர் இன்று மாலை 5:45 மணிக்கு, ‘பாபா நி பாரி’ லக்னோத்சவ் என்ற நிகழ்வுக்காக பன்வாகர் பகுதிக்குச் செல்கிறார் மோடி., அங்கே தந்தை இல்லாத 552 பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது.
குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக 89 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதியும், 2வது கட்டமாக 93 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.
டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
–வேந்தன்
கடைசி போட்டியில் கதகளி: பாகிஸ்தானை பின் தள்ளிய இந்தியா
ஆர்.எஸ்.எஸ். பேரணி: மத்திய அரசுக்கு பயந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!