Rahul Gandhi accuse Modi

”தேர்தலில் மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய முயல்கிறார்” : ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

அரசியல் இந்தியா

”இந்திய நாட்டின் அரசியல் சாசனம், உரிமைகள், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம் தான் இந்த மக்களவைத் தேர்தல். இதில் நீங்கள் (மக்கள்) நியாயமாக வாக்குகளை அளிக்கவில்லை என்றால், மேட்ச் பிக்சிங் செய்து மோடி வெற்றி பெறுவார்” என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட்  முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரன் ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளது இந்தியா கூட்டணி கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று (மார்ச் 31) பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Image

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், “மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ஒரு சில கோடீஸ்வரர்களின் உதவியுடன் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங் செய்ய முயல்கிறார்.

தேர்தலுக்கு முன்பு இரண்டு முதல்வர்களை அமலாக்கத்துறை மூலம் சிறைக்கு அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சி. தேர்தல்களுக்கு நடுவே எங்களது வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கி வைத்துவிட்டார். இப்போது நாங்கள் பிரச்சாரம் செய்ய, நட்சத்திர பேச்சாளர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப, போஸ்டர் ஒட்ட எங்களிடம் நிதி இல்லை.  என்ன வகையான தேர்தல் இது?

இவற்றையெல்லாம் தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்போ அல்லது ஆறு மாதத்திற்கு பின்போ பிரதமர் மோடியால் செய்திருக்க முடியும். ஆனால் தேர்தலுக்கு முன்பு ஏன் இதை செய்தார்? மோடி இந்தியா கூட்டணியைக் கண்டு பயப்படுகிறார். எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை.

பெரும்பான்மை கிடைத்தவுடன் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்று ஒரு பாஜக தலைவர் ஒருவர் கூறுகிறார். இந்திய நாட்டின் அரசியலமைப்பு என்பது மக்களின் குரல். அது முடிவடையும் நாள் என்பது நம் நாட்டுக்கும் முடிவு நாள்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

 

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை நாடு எதிர்கொள்கிறது.

தங்களுக்கு ஆதரவான ஆட்களை தேர்தல் ஆணையத்தில் நியமித்து, ஆட்சியில் நீடிக்க நீதித்துறைக்கு மோடி அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்திய மக்களிடம் இருந்து அரசியல் சாசனத்தைப் பறிப்பதுதான் மேட்ச் பிக்சிங் செய்த மோடியின் ஒரே குறிக்கோள்.

ஊடகங்களை அவர் வாங்கலாம் ஆனால் இந்தியாவின் குரலை வாங்க முடியாது. உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் குரலை நசுக்க முடியாது.

2024 மக்களவைத் தேர்தல் வாக்குகளுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல, இந்திய நாட்டின் அரசியல் சாசனம், உரிமைகள், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம்.

ஈவிஎம் இயந்திரங்கள், மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பாஜகவால் 180 சீட் கூட வெல்ல முடியாது.

நீங்கள் நியாயமாக வாக்குகளை அளிக்கவில்லை என்றால், மேட்ச் பிக்சிங் செய்து மோடி வெற்றி பெறுவார். அதன்பின்னர் இந்தியாவை காப்பாற்ற முடியாது” என்று ராகுல்காந்தி பேசினார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தலைநகரில் நடந்து வரும் இந்த பிரம்மாண்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், திமுக சார்பில் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும்,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Rain Update: கொளுத்தும் ‘கோடை’ வெயிலுக்கு இதமாக… ‘ஜில்லுன்னு’ அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

கலைஞர் நினைவிடத்திற்கு சீல் வைக்க வேண்டும் : அதிமுக கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *