திமுக-பாஜக கூட்டணியா? நள்ளிரவு வரை என்ன பேசினார் பிரதமர்? 

அரசியல்

பிரதமர் மோடி நேரு ஸ்டேடியத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வைத் தொடக்கி வைத்துவிட்டு  நேற்று (ஜூலை 28)  கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்குத் திரும்ப, இரவு திட்டமிட்டதை விட நேரம் தாமதமாகிவிட்டது. அதன் பின் பிரதமர் இரவு உணவு எடுத்துக் கொண்டு தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பு முடிந்து நள்ளிரவு 12 மணிக்குதான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதுவரைக்கும் பத்திரிகையாளர்கள் காத்திருந்ததால் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

 “செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தமிழக முதல்வர் தமிழக கலாசாரத்தை, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தொன்மை, கலாச்சாரம், ஆன்மீகம் அனைத்தையும் மிக சிறப்பாக  உலகம் முழுதும் செல்லும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். நமது தமிழக முதல்வர், பிரதமர் உரையிலும் நம் நாட்டை முதன்மைப்படுத்தினார்கள். இது ரொம்ப அற்புதமான நிகழ்ச்சி. பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி. தமிழக அரசுக்கு நன்றிகள், வாழ்த்துகள்.

சென்னை மாநகரம் முழுதும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிரதமரை ராஜ்பவனில் அழைத்து வந்து அவரை மூத்த நிர்வாகிகள் சந்தித்தோம். அவரிடம் அரசியல் பேசவில்லை. புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் பிரதமரைப் பார்த்து ஆசி வாங்கினார்கள். சில தலைவர்களின் குடும்பங்களில் திருமணங்கள் நடந்திருக்கிறது. அவர்களையும் பிரதமர் வாழ்த்தினார்.  பழைய தொடர்புகள், பால்ய நண்பர்கள் எல்லாம் பிரதமரை பார்த்தார்கள். அதற்காகத்தான் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தோம். மற்றபடி பிரதமருடனான சந்திப்பில் அரசியல் அதிகமாக பேசவில்லை” என்ற அண்ணாமலையிடம்…

“மேடையில் பிரதமரும் முதல்வரும் அந்நியோன்யமாக பேசினார்கள். இதனால் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?” என்று கேட்டனர்.

“பாஜக ஐடியாலஜி கொள்கை அடிப்படையிலான கட்சி.  போன முறை பிரதமர் வந்தபோது நான் முதல்வரை இன்னும் கொஞ்சம் பெரியமனதோடு  பேசியிருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் இந்த முறை முதல்வரின்  செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தன. அதனால்தான் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும்  பாராட்டுகளை தெரிவித்தோம். பாராட்டினால் உடனே திமுகவோடு கூட்டணியா?  பாஜக கொள்கை அடிப்படையிலான கட்சி. தமிழ்நாட்டு கள நிலவரத்தை பிரதமருக்கு நாங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றில்லை” என்று சிரித்தார் அண்ணாமலை.  

வேந்தன்

+1
0
+1
4
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *