பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கேரளா மற்றும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது அவர் உள்நாட்டு தயாரிப்பு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துகொள்ள மோடி பல்வேறு திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் , செப்டம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு, கொச்சி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள காலடி கிராமத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் புனிதப் பிறப்பிடமான ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்துக்கு வருகை தருகிறார் மோடி.
செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில், முதல் உள்நாட்டு தயாரிப்பில் உருவான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை இயக்குகிறார்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை குறிக்கும் வகையில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (WDB)வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் அதிநவீன ஆட்டோமேஷன் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் இது என்ற பெருமையை பெறுகிறது.
இந்தக் கப்பல் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கும், இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும்.
இந்த நிகழ்வின் போது, காலனித்துவ கடந்த காலத்தை அகற்றி, இந்திய கடல்சார் பாரம்பரியத்திற்கு ஏற்ற புதிய கடற்படைக் கொடியையும் (நிஷான்) பிரதமர் வெளியிடுகிறார்.
அதன்பின், மதியம் 1.30 மணிக்கு, மங்களூருவில் சுமார் 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
புதிய மங்களூர் துறைமுகத்தை இயந்திரமயமாக்குவதற்கான ரூ.280 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்து,
துறைமுகம் மூலம் மேற்கொள்ளப்படும் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மோடி முன்னிறுத்திய பகல் கனவுகள்: காங்கிரஸ் கடும் தாக்குதல்!