பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் தெலங்கானா மக்களுக்கு ஆபத்தானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் சுமார் ரூ.6,100 கோடி மதிப்பிலான பல முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (ஜூலை 8) அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சரும், தெலுங்கானாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இன்றைய புதிய இந்தியா ஆற்றல் நிறைந்தது. 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் நமக்கு ஒரு பொற்காலம் உள்ளது, அதை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
தெலுங்கானா மக்களின் பலம் எப்போதுமே இந்தியாவின் பலத்தை அதிகப்படுத்தியுள்ளது. இன்று இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் 5வது இடத்திற்கு முன்னேறியதற்கு தெலுங்கானா மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்ய வரும் உலக நாடுகள் தெலங்கானாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய தெலங்கானா அரசு 4 விஷயங்களை செய்து வருகிறது. அவை, பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றது.
ஊழல் மூலம் தெலங்கானாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்து வருகிறது. தெலங்கானாவை ஊழலில் மூழ்கடித்து வருகிறது. ஊழல் இல்லாமல் எந்த திட்டமும் செயல்படுவதில்லை.
வாரிசு அரசியல் கட்சிகளின் அடித்தளம் ஊழலில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊழலை நாடு முழுவதும் பார்த்தது. மேலும் தெலங்கானா முழுவதும் பாரத ராஷ்டிர சமிதி மூலம் ஊழலைப் பார்க்க முடிகிறது.
பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் இரண்டுமே தெலங்கானா மக்களுக்கு ஆபத்தானது” என்று பேசினார் மோடி.
மோனிஷா
மெட்ரோவால் தாமதம் ஆகும் உயர்மட்ட பால பணிகள்: எ.வ.வேலு
ரயிலில் ஏசி வகுப்பு கட்டணம் குறைப்பு: ரயில்வே வாரியம்!