டிஜிட்டல் திண்ணை: மோடி சென்னை விசிட்டில் புது கூட்டணிக்கு அச்சாரம்? அண்ணாமலையின் அதிரடி திட்டம்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரின் பிரஸ்மீட் வீடியோக்கள் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்,
”ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கூட்டணி குறித்து வேறு விதமான கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Modi coming to Chennai Annamalai plans for a new alliance

எல்.முருகன் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ‘அமித் ஷா சொன்னபடியே அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் பாஜக சிறப்பு கவனம் வைத்துள்ளோம். அதில் இந்த தென் சென்னை தொகுதியும் முக்கியமானது’ என்றார். நேற்றுதான் (ஏப்ரல் 1) பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் எல்.முருகன் என்பது குறிப்பிடத் தக்கது.

இதேநேரம் பெங்களூருவில் இருந்து வந்த அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கூட்டணி குறித்து அமித் ஷா பேசியதை புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, ‘கூட்டணி இருக்கிறது என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார். ஆனால் பத்திரிகைகள் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது’ என்றெல்லாம் எழுதுகிறார்கள். இப்போதைக்கு பேசுவது ஏப்ரல் 2 ஆம் தேதி நிலவரம்தான். கூட்டணி குறித்து பேசுவதெல்லாம் கல்லில் எழுதி வைப்பதல்ல, தண்ணீரில் எழுதி வைப்பதுதான். நேரத்துக்கு தக்கபடி மாறும்’ என்று கூறினார் அண்ணாமலை.

Modi coming to Chennai Annamalai plans for a new alliance

மார்ச் 17 ஆம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘அதிமுகவோடு கூட்டணி வைத்தால் என் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்’ என்று கூறினார். இதை மின்னம்பலம்தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அதிமுக- பாஜக இடையே வார்த்தை பரிமாற்றங்கள் தொடர்ந்தன.

இந்த நிலையில்தான் அமித் ஷாவை பார்த்துவிட்டு வந்த அண்ணாமலை, ‘கூட்டணி குறித்து தேசிய பார்லிமென்ட்டரி போர்டு முடிவெடுக்கும்’ என்றார். இப்போது அமித் ஷா பேசியதற்கே புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த பின்னணியில் அதிமுகவோடு கூட்டணி வைத்து போட்டியிடுவதில் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது பேட்டிகள் எடுத்துக் காட்டுகின்றன.

இதற்கிடையே அதிமுக தரப்பில் ஜெயக்குமார், ‘அதிமுக தலைமையில்தான் கூட்டணி. என்னென்ன தொகுதிகள் என்பதை தொகுதிப் பங்கீட்டுக் குழுதான் முடிவு செய்யும்’ என்று முருகனுக்கும், அண்ணாமலைக்கும் சேர்த்து பதிலளித்துள்ளார்.

கடந்த வாரம் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை, ‘தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஜூனியராக பாஜக இருப்பதால் பயனில்லை. பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கலாம். அதனால் பாஜக 2026 இல் வளர்ச்சியை நோக்கி செல்லும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக அல்லாத அமமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான் பாண்டியன் கட்சி உள்ளிட்ட கட்சிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவந்து 2024 தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் அண்ணாமலை.

இந்த கூட்டணிக்கு அச்சாரமாக வரும் ஏப்ரல் முதல் வாரம் சென்னை வரும் பிரதமர் மோடியின் வருகையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் துவக்க விழா, சென்னை விமான நிலைய புதிய முனைய துவக்க விழா, ராமகிருஷ்ணா மெஷின் விழாக்களில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை வருகிறார்.

இதற்காக இன்று (ஏப்ரல் 2) சென்னை குரோம்பேட்டையில் பாஜகவின் சென்னை, விழுப்புரம் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாலை 4.30க்குத் தொடங்கிய கூட்டத்தில் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி முடித்த பின் 7 மணிக்குதான் வந்தார் அண்ணாமலை. ஏர்போர்ட்டில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை திரளவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பேசினார் அண்ணாமலை.
கட்சி ரீதியில் கூட்டம் திரட்ட இந்த திட்டம் என்றால், அண்ணாமலையிடம் இன்னொரு திட்டமும் இருக்கிறது.

மோடியின் இந்த வருகையின் போது டிடிவி தினகரன், அன்புமணி, பிரேமலதா, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரத்யேகமாக பிரதமரை சந்திக்கும் நிகழ்ச்சிக்காக முயற்சித்து வருகிறார் அண்ணாமலை. இதுகுறித்து தேசிய தலைமையிடம் அண்ணாமலை தகவல் தெரிவித்து ஒப்புதல் கேட்டிருக்கிறார் என்கிறார்கள்.

பிரதமர் மோடி சென்னை வந்தால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரை சந்திக்கக் கூடும். ஆனால் அண்ணாமலையின் பிரத்யேக முயற்சி என்னவென்றால் அதிமுக அல்லாத பிற கட்சித்தலைவர்களை பிரதமரிடம் அழைத்துச் சென்று பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி அமைப்பதற்கான அச்சாரம் போடுவதுதான். இந்த ஏற்பாடு நடக்குமா நடக்காதா என்பதுதான் பாஜகவுக்குள் இப்போது நடக்கும் பட்டிமன்றம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு!

உலகக்கோப்பையின் அந்த 20 நிமிடம்…மனம் திறந்த தோனி

+1
0
+1
3
+1
2
+1
1
+1
5
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *