பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நாளை மறுதினம் 7ஆம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார்.
இதனால் கன்னியாகுமரி கடற்கரை சுற்றுவட்டார பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடல் வழி, வான் வழி, தரை வழி என அனைத்து வழியிலும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி மோடி குமரிக்கு வந்து தியானம் செய்யவிருப்பதாக கூறி அவரது வருகைக்கு திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இன்று (மே 30) நெல்லையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மாடியில் 50க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாத்மா காந்தியை அவமதித்தவர் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
மறுபக்கம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கோ பேக் மோடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னையில் அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம், பசுமைவழிச் சாலை, அரசினர் தோட்டம் போன்ற முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணாதுரை இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
அதில், “ தமிழ் மக்களை இழிபடுத்தி விட்டு, தமிழ்நாட்டுக்கு வருவதா… Hello Netizen, Ready Start 1 2 3 #GoBackModi ” ஆகிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
சமூக வலைதளங்களிலும் GoBackModi ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யவும், போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்தவகையில் ட்விட்டரில் #GoBackModi , 56.8 ஆயிரம் போஸ்டுகளுடன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
SK vs DQ : “லக்கி பாஸ்கர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
கோட்சே வழி வந்தவர்களுக்கு காந்தியை பற்றி தெரியாது… மோடிக்கு ராகுல் பதிலடி!