மோடி வருகை:  காங்கிரஸ்காரர்களை ஹவுஸ் அரெஸ்ட் செய்த திமுக போலீஸ்!

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தந்திருக்கும் நிலையில், அவர் திரும்பப் போகும் வரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார் சிறைக் காவலில் தற்போது இருந்து வரும் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மூன்று நாள் விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள். இதனால் கோபமான  காங்கிரஸ்காரர்கள் நாடு முழுவதும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகிறார்கள்.  இன்னொருபக்கம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இசிஆர் சாலையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் துவக்கி வைக்க நேற்று 28ஆம் தேதி வருகை தந்தார் பிரதமர் மோடி.   மாலையில் விழாவை நேரு உள் விளையாட்டு அரங்கில் துவக்கி வைத்தார் மோடி.

மோடிக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ்காரர்கள் கருப்பு ஆடைகள் அணிந்து கருப்பு கொடி காட்டுவதற்குத் திட்டமிட்டிருந்தார்கள்.  திமுக அரசு ஏற்பாடுகள் செய்துள்ள விழாவில் கலந்து கொள்ள வரும் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டிடக் கூடாது என்று திட்டமிட்ட உளவுத்துறை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு அலர்ட் மெசெஜ் போட்டது.  உடனடியாக சென்னை மாநகர  கமிஷனர் சங்கர் ஜிவால் சிட்டி போலீஸாரை முடுக்கிவிட்டார்.

பூந்தமல்லி ஹைவே சாலையில் உள்ள புளு டைமன் ஹோட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் கருப்பு கொடியுடன் இருந்த சுமார் 60 இளைஞர்களைக் கண்டுபிடித்து ஹோட்டலிலேயே  கைதுசெய்து ஹவுஸ் அரெஸ்ட் வைத்துள்ளனர் பலத்த  போலீஸ் பாதுகாப்புடன்.

அதேபோல் மாவட்டத் தலைவர்கள் திரவியம், ராஜசேகர், ரஞ்சன், முத்தழகன் உட்படச் சென்னையில் உள்ள பத்து நிர்வாகிகளை ஹவுஸ்  அரெஸ்ட் செய்து வைத்துள்ளனர்.

நாம் தகவல் அறிந்து வடசென்னை மாவட்டத் தலைவர் திரவியத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம்.  “அன்னை சோனியா காந்தியை மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அவமானப் படுத்துகிறார்கள்.  மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து விற்பனை செய்துவருகிறார்கள்.  அதற்காகத் தமிழகத்துக்கு வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காலையில் எழுந்து பத்துபேருடன் கருப்பு சட்டை அணிந்துகொண்டு பிரச்சாரம் செய்துவிட்டு வந்தோம், வேறுஒன்றும் செய்யவில்லை, அதற்குள் போலீசார் வந்தனர். உங்களை ஹவுஸ் அரெஸ்ட் செய்கிறோம் என்று குடும்பத்துடன் வீட்டுக்குள் வைத்து வெளியில் வராதபடி போலீஸார் நின்றிருக்கிறார்கள்.

29ஆம் தேதி, மோடி விமானம் நிலையம் செல்லும் வரையில் ஹவுஸ் அரெஸ்ட் தான். அதன் பிறகுதான் ரிலீஸ் செய்வார்களாம். என்னைப் போன்று சென்னையில் உள்ள முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளை ஹவுஸ் அரெஸ்ட் செய்துவைத்துள்ளனர்.  மோடி வருகைக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை ஹவுஸ் அரெஸ்ட் செய்து மோடியை குஷிப்படுத்துகிறது திமுக ஆட்சி ” என்றார் திரவியம்.

வணங்காமுடி

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0