இந்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினம், ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் ப்ரொஃபைல் புகைப்படத்தில், தேசியக் கொடியை இன்று வைத்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
கடந்த ஜூலை 31ஆம் தேதி “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசும் போது, “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரையில் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
ஆகஸ்ட் 2 முதல் 15 வரையில் மக்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ப்ரொஃபைல் புகைப்படமாகத் தேசியக் கொடியை வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைல் புகைப்படத்தை இன்று (ஆகஸ்ட் 2) மாற்றியுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ட்விட்டர் பயனர்கள் குறிப்பாக பாஜகவினர் தங்களுடைய ப்ரொஃபைல் புகைப்படங்களை மாற்றி வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியப் பிரேதச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் ப்ரொஃபைல் படத்தைத் தேசியக் கொடியாக மாற்றியுள்ளனர்.
இதனிடையே தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யாவுக்கு அவரது பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…