திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று (நவம்பர் 11) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து, இவ்விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து, இன்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, ஹெலிஹாப்டர் மூலம் திண்டுக்கல் அம்பாத்துரைக்கு சென்றார்.
பின்னர், திண்டுக்கல்லிலிருந்து சாலைமார்க்கமாக சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலருக்கும் காந்தி பல்கலைக்கழக சார்பில் வெள்ளை தொப்பி தரப்பட்டது. அதை அவர்கள் அணிந்துகொண்டபிறகு, ’அறிவாலயத்துக்குள் வருக’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. அதற்கு எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மனோ தங்கராஜ், கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் கலந்துகொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இதில் கலந்துகொண்டார். இவ்விழாவில் ஏராளமான பாஜக நிர்வாகிகளும், திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
ஜெ.பிரகாஷ்