இந்தியாவில் ஜி 20 மாநாடு நடத்துவதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் நிலையில், அதில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், சீனா, இந்தோனேசியா, தென் கொரியா ஆகியவை ஜி 20 நாடுகள்.
இந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை ஏற்று ஜி 20 மாநாட்டை நடத்தியது. அப்போது அடுத்த தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான இலச்சினையும் வெளியிடப்பட்டது. இலச்சினையில், பூமிப்பந்து ஒரு தாமரையின் மீது வைக்கப்பட்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
தாமரை சின்னம் இடம் பெற்றதற்குக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.
இது பாஜகவின் தேர்தல் சின்னம் போல் அமைந்திருப்பதாக தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி.யும் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ், “மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
ஜி 20 மாநாட்டுக்குச் சென்றிருந்த போது, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உட்பட பலரும் இந்தியப் பிரதமரை உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் என்று கூறி நட்பு பாராட்டியதாக அரசு தரப்பினரும் , பாஜக தரப்பிலும் புகைப்படங்கள் வெளியிட்டனர்.
ஆனால் அங்கே மோடிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் சமூக தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தற்போதே மத்திய அரசு தொடங்கிவிட்டது.
மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனையை டெல்லியில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி பிரதமர் நடத்துகிறார். இதற்காக அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஜி 20 இலச்சினை குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என அக்கட்சிக்குள் இருவேறு கருத்துகள் உலவுகின்றன. இதை அரசியல் ரீதியாக பார்க்கலாமா அல்லது ஒரு நாட்டுக்கான விஷயமாக எடுத்துக்கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா என்று ஆலோசித்து வருகிறது அக்கட்சி.
இதுபோன்ற சூழலில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். முதல்வர் டிசம்பர் முதல் வாரம் டெல்லி செல்வது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
ஏற்கனவே, திமுக பாஜகவோடு கூட்டணியில் இல்லாதபோதும் மத்திய அரசோடு மாநில அரசு என்ற ரீதியில் அனுசரணையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால் அரசியல் ரீதியாக எந்த சமரசமும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேட்டிகளில் கூறி வருகிறார்.
அதேசமயத்தில் அரசு ரீதியான விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து முதல்வர் டெல்லி செல்வதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு நடத்திய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பிரதமர் கலந்துகொண்டதைப் போல இந்த நிகழ்வை பார்க்க வேண்டும் என்கிறார்கள் திமுக தரப்பில்.
இந்த ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டெல்லி செல்கிறார்.
அடுத்தடுத்து யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இது மோடிஜியின் 20 கிடையாது, இந்தியாவின் ஜி 20 என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.
–கவிப்பிரியா
FIFA WorldCup : லீக் சுற்றுகளில் இருந்து வெளியேறும் நெய்மர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!