வைஃபை ஆன் செய்ததும் திமுக மாசெக்கள் கூட்ட போட்டோக்கள் இன்பாக்வில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பிப்ரவரி 23 ஆம் தேதி காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பிப்ரவரி 26 முதல் தமிழகம் முழுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தமிழ்நாடு அரசின் சாதனைகளை சொல்லும் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்கிற திண்ணைப் பிரச்சாரத்தைத் துவக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.
மாசெக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது கடந்த வாரம் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டு பொதுவாக பாராட்டினார்.
“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்- என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.
அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.
இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று இந்தக் கூட்டத்தில் பாராட்டினார் ஸ்டாலின்.
அதேநேரம் இந்த பொதுக்கூட்டங்களைப் பற்றி இன்னொரு கோணத்தில் முதலமைச்சருக்கு ஃப்ரஷ் ரிப்போர்ட் ஒன்று சென்றிருக்கிறது.
அதாவது தமிழகம் முழுவதும் நடந்த திமுகவின் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த பொதுக் கூட்டங்களில் பேசிய கணிசமான திமுக அமைச்சர்கள் பிரதமர் மோடி மீது கடுமையான அட்டாக் செய்யவில்லை. தமிழக அரசின் நலத்திட்டங்களை பேசிய அமைச்சர்கள் மோடியை தாக்கிப் பேசுவதில் ஏனோ ஒரு வித எச்சரிக்கை உணர்வை கடைபிடித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார்கள். அடுத்தடுத்த அமைச்சர்களுக்கு சட்ட ரீதியான நெருக்கடி அதிகரித்து வருவதாலோ என்னவோ, கணிசமான அமைச்சர்கள் மோடி அட்டாக்கை சற்று குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் மற்ற நிர்வாகிகள் மோடி அட்டாக்கை கூர்மைப்படுத்தியிருக்கிறார்கள்’ என்பதுதான் அந்த ரிப்போர்ட்.
அதாவது மோடி அட்டாக்கை யார் யார் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் என்றும், யார் யார் மிதமாக இருந்திருக்கிறார்கள் என்றும் பட்டியல் போடப்பட்டு அந்த ரிப்போர்ட்டில் இடம்பெற்றிருக்கிறது.
இதைப் பார்த்த முதலமைச்சர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பொதுக்கூட்ட உரைகளை ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்திருக்கிறார். இதன் பின்னர் இன்று நடந்த மாசெக்கள் கூட்டத்துக்குப் பிறகு மோடி அட்டாக்கில் தயக்கம் காட்டிய அமைச்சர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியே பேசி, ‘ஏன் உங்களுக்கு பயம்? இந்தியா கூட்டணி எல்லா மாநிலங்களிலும் வெல்ல வேண்டுமென்று நான் பல முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நிச்சயம் இந்திய அளவில் மாற்றம் ஏற்படும். அதனால் மோடி அட்டாக்கை அதிகப்படுத்துங்கள்’ என்று எச்சரிக்கை தொனியில் அறிவுறுத்தியுள்ளார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்சபட்ச பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் i20!
உக்ரைன் – ரஷ்யா போர் : ’டூப்’ ராணுவ வீரர்களாக சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!